தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. சட்டசபையில் 2025-26- ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.

இதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து 17-ஆம் தேதி முதல் சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.அப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவார்கள்.
இதையும் படிங்க: இந்தியில் மட்டும் தான் பதில் வருமா..? அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

இந்த நிலையில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. அரசு தலைமை கொறடா வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்றும் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், பட்ஜெட் மீதான விவாதத்தில் யார் யார் பேச வேண்டும் என்பது உட்பட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: நாளை பட்ஜெட் தாக்கல் - என்னவெல்லாம் அறிவிக்கப்படலாம்?