சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற் குறிப்பு அரசிடம் உள்ளதா என்று சட்டசபையில் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. அசோகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமை எனவும் குறிப்பிட்டார்.

புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், இந்திய அளவில் 64 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2-ம் இடத்தில் உள்ளது என்றும் கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலாப்பழம், முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, பெரம்பலூர் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது எனவும் இதற்கு முன்பு கோவில்பட்டி கடலை மிட்டாய், உடன்குடி பனங்கருப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்பெஷல் அங்கீகாரம்..! கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு..!

ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டுமென்றால் அந்த பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து தோன்றியிருக்க வேண்டும்., மேலும் அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும்., பொருட்களுக்கும் பகுதிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கும் தொடர்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று விளக்கமளித்த அமைச்சர், தீப்பெட்டி தொழிலைப் பொறுத்தமட்டில் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் 566 நிறுவனங்களும் கோவில்பட்டியில் சுமார் 400 நிறுவனங்களும் தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து வருவதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

தீப்பெட்டி தொழிற்சாலை சங்க உறுப்பினர்கள் புவிசார் குறியீடு பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் வரலாற்று ஆவணங்கள் கிடைக்கபெறும் பட்சத்தில் புவி சார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார். அப்போது கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. இதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறியதை தொடர்ந்து, வரலாற்று ஆவணத்தை அழித்தால் ஆய்வு செய்து சிவகாசி தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடுகள் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.
இதையும் படிங்க: ஸ்பெஷல் அங்கீகாரம்! மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு!