திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (42). இவர் திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 14 ஆண்டுகளாக, தனக்கு தெரிந்த நபர்களை வங்கி கடன் வாடிக்கையாளர்களாக ஏற்பாடு செய்து 42 போலி வங்கிக் கணக்குகள் மூலம் போலி நகைகளை அடமானம் வைத்து அதன் மூலம் கடன் பெற்றிருக்கிறார். இவ்வாறு பாஸ்கர் சுமார் 200 பவுன் போலியான நகைகளை அடமானம் வைத்து, ரூ.1 கோடியே 30 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் கடற்கரையில் ஒதுங்கிய கடவுள் சிலை.. கடற் சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை..

இதுகுறித்து வங்கியின் முதன்மை மேலாளர் ராஜன் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், திருப்பத்தூர் நகர போலீசார் பாஸ்கரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் மூலமாக 42 நபர்களின் வெவ்வேறு கணக்குகளில் வைக்கப்பட்ட 42 வகையான போலி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட பாஸ்கரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோலாகலமாக நடைபெற்ற ஆற்காடு அரிசி திருவிழா..