மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவருக்கு விதிகளை தளர்த்தி, சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1994 - 1995ம் ஆண்டில் நடந்த உதவி ஆய்வாளர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்ற முத்துமாணிக்கம் என்பவர் ஆயுதப்படையில் நியமிக்கப்பட்டார். பின்னர் ஆயுதப்படையில் ஆய்வாளராகவும், அதன் பின் துணை காவல் கண்காணிப்பாளராகவும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆயுத படையில் இருந்து சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு மாற்றக் கோரி அவர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்த அரசு, போலிஸ் விதிகளில் விலக்களித்து கடந்த 2014ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அவர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றி அப்பிரிவில் காவல்துறை கூடுதல் காவல் கண்கணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் OPS, சசிகலா? எடப்பாடியின் அடுத்த நகர்வு!
ஆயுதப்படை பிரிவியில் இருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு முத்துமாணிக்கத்தை மாற்றியதை எதிர்த்தும், பதவி உயர்வு வழங்கியதை எதிர்த்தும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, முதலமைச்சரின் பாதுகாவலர் என்ற காரணத்திற்காக அவரை, ஆயுத படை பிரிவில் இருந்து சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு மாற்றியது செல்லாது என அறிவித்து அது சம்பந்தமான உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஆயுத படையில் தொடர்ந்து கூடுதல் கண்காணிப்பாளராக பணியை தொடரலாம் என தனி நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து முத்துமாணிக்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி அருள் முருகன் அமர்வு, அவசர மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது மட்டும் தான் விதிகளில் விலகளிக்க முடியும், ஆனால் முதலமைச்சரின் பாதுகாவலர் என்ற காரணத்திற்காக முத்துமாணிக்கத்திற்கு விதி விலக்கு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை சட்ட விரோதமானது. இதன் மூலம் 770 காவல் துறை அதிகாரிகளை பின்னுக்கு தள்ளி முத்துமாணிக்கத்திற்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என்பதால் சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்த தனிநீதிபதியின் உத்தரவு சரிதான் எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ஜெ. வலது கரத்தை விசாரிக்கிறது போலீஸ்..! எடப்பாடிக்கு சிக்கலா..? கொலை கொள்ளை வழக்கில் மர்மம்..!