முன்னாள் எம்.எல்.ஏவும், அதிமுக அமைப்பு செயலாளருமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்ததாகவும், கருப்பசாமி பாண்டியன் 1977-இல் ஆலங்குளம், 1980-இல் பாளையங்கோட்டை, 2006-இல் தென்காசி தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இளம் வயதில் விட்டு சென்றது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது... மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!!

நீண்டகாலம் அவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உடனடியாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதைப்போல் கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தளகர்த்தர்களில் ஒருவரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. முதல் மாவட்டச் செயலாளர் என்கிற பெருமைக்குரியவருமான ஆருயிர்ச் சகோதரர் கருப்பசாமி பாண்டியன் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.

தமது 26-வது வயதிலேயே ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் தொடர்ந்து பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணி ஆற்றியவர்., என் தம்பி கருப்பசாமி பாண்டியன் உருவம்தான் கருப்பு., உள்ளமோ வெள்ளை என்று எம்.ஜி.ஆரால் பாராட்டிப் போற்றப்பட்டவர் எனவும் புகழாரம் சூட்டினார். 50 ஆண்டு காலமாக நெல்லை மாவட்ட அரசியல் களத்தில் சிறந்ததோர் ஆளுமையாக வலம் வந்து, நெல்லைச் சீமைத் தொண்டர்களால் நெல்லை நெப்போலியன் எனப் போற்றப்பட்ட சகோதரர் கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு ம.தி.மு.க. சார்பில் இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியை திணிப்பதே திமுக தான்... அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!!