நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட். இங்கு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி கொள்ளை முயற்சி ஒன்று நடைபெற்றது. இதில் கோடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். முக்கிய குற்றவாளி என்று வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கனகராஜ் என்பவர் சில மாதங்களிலேயே சேலம் ஆத்தூர் அருகே வாகன விபத்தில் பலியானார்.

இந்த வழக்கில் சயான், மனோஜ், தீபு, சதீஷன், ஜம்சேர் அலி, சந்தோஷ் சாமி, பிஜின் குட்டி, உதயகுமார், மனோஜ் சாமி உள்பட 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் தீபு உள்ளிட்ட 3 பேர் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன், நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர், எஸ்.பி.ரம்பா, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: ஜெ. வலது கரத்தை விசாரிக்கிறது போலீஸ்..! எடப்பாடிக்கு சிக்கலா..? கொலை கொள்ளை வழக்கில் மர்மம்..!
இதனை ஏற்க நீதிமன்றம் மறுத்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இப்போது முதலமைச்சராக இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனிடையே வழக்கை 2022-ம் ஆண்டு முதல் விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இப்போது கோடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனை வருகிற 27-ந் தேதி தனிப்படை முன்பாக ஆஜராகும்படி சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் சம்மன் அனுப்பி உள்ளார்.
சம்பவம் நடைபெற்று 8 ஆண்டுகள் ஆகியும் வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு நகராதது ஏன் என அரசியல்ரீதியாக கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுவரை 268 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று இருப்பதாகவும், 8 செல்போன்கள் 4 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தெரிந்த திமுக அரசுக்கு, 8 ஆண்டுகளாக இந்த வழக்கை இழுத்தப்படிப்பது தெரியாதா என அதிமுக தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். ஜெயலலிதா இருக்கும்போதும் சரி, மறைந்தபின்னும் சரி, கோடநாடு எப்போதும் மர்மதேசமாகவே இருந்து வருகிறது.
இதையும் படிங்க: கொடநாடு கொலை வழக்கு விசாரணை - 3 போலீசார் நாளை ஆஜராக சிபிசிஐடி சம்மன்