சென்னை கீழ்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் செல்வி. இவர் புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பணி நிமித்தமாக நீதிமன்றத்திற்கு சென்ற செல்வி பின்னர் பணிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் சக காவலர்கள் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீசார் சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. பலமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது செல்வி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: குற்றவழக்குகளில் கணவருக்கு தொடர்பு.. பெண் தலைமை காவலர் விபரீத முடிவு? பணிச்சுமையா? குடும்ப பிரச்னை காரணமா?
அந்த விசாரணையில் அவரது கணவர் ரவுடி என்பதும் இதனால் மன உளைச்சலில் பெண் தலைமை காவலர் செல்வி இருந்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தலைமை காவலர் செல்வி அவரது உறவினரான நல்லுசாமி என்பவரை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். பின்னர் 2008 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார் செல்வி. சிவகங்கை தேவகோட்டை திருப்பத்தூரில் பணியாற்றி வந்த அவர் சென்னைக்கு பணி நிமிர்த்தமாக வந்துள்ளார்.

செல்வியின் கணவர் நல்லசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், அவர் ஏ ப்ளஸ் ரவுடி பட்டியலில் இருந்துள்ளதும், அடிக்கடி அவரை தேடி வெவ்வேறு மாவட்ட போலீசார் வந்து கைது செய்து சிறையில் அடைப்பதும் வாடிக்கையாக்கி வந்துள்ளது. தனது கணவரின் செயல்பாடுகளால் வேதனை அடைந்த செல்வி கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.
இதை கண்டறிந்த மதுரை போலீசார் வாரண்ட் தொடர்பாக நல்லுசாமியை கடந்த ஜனவரி மாதம் கைது செய்துள்ளனர். மீண்டும் ஜாமினில் வெளிவந்த நல்லுசாமி சிவகங்கையில் வசித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கொலையில் நல்லுசாமிக்கு தொடர்பு இருக்கலாம் என்று மாவட்ட போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான செல்வி தனது கணவருடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. தனது கணவர் அடிக்கடி போலீசாரால் கைது செய்யப்படுவதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த செல்வி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திருநெல்வேலி அருகே பெண் தற்கொலை.. போலீசார் விசாரணை..