திருமணம் ஆனதும் தனது மனைவிக்கு 15 லட்சம் ரூபாய் செலவு செய்து ரயில்வே துறையில் ஆள் மாறாட்டம் செய்து வேலை வாங்கி கொடுத்தார் தனியார் நிறுவன ஊழியர், ஒருவர். ஆனால், வேலை கிடைத்த ஐந்து மாதங்களில் "உங்களுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை ;அதனால் உங்களை விட்டு பிரிகிறேன்" என்று சொல்லி கணவரை விவாகரத்து செய்துவிட்டார், மனைவி.
இதனால் அந்த அப்பாவி கணவர் கொடுத்த புகாரின் பேரில், சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி, ரயில்வே துறையில் பணியாளர்களை வேலைக்கு நியமிப்பதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதை கண்டுபிடித்து உள்ளனர். சுவாரசியமான முறையில் அம்பலத்துக்கு வந்துள்ள இந்த ஊழல் பற்றிய விவரம் வருமாறு:-
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் வசித்து வருபவர், மணீஷ் மீனா. ரயில்வே துறையில் தனியார் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆன இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மனைவி ஆஷாவுக்கு ரயில்வே துறையில் முறைகேடாக வேலை வாங்கி கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: 37 ஆயிரம் லஞ்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்த விஏஓ.. பக்கா ஸ்கெட்ச் போட்ட போலீஸ்..!

அதாவது ரயில்வே ஆள் சேர்ப்பு வாரியம் நடத்திய நாலாவது கிரேடு தேர்வில், தனது மனைவிக்கு பதிலாக வேறு ஒரு போலி நபரை தேர்வு எழுத வைத்து எப்படியோ வேலை வாங்கி கொடுத்து விட்டார். ரயில்வே காவலராக பணிபுரிந்த ராஜேந்திரா என்ற இடைத்தரகர் மூலம் இதற்காக தனது விவசாய நிலத்தை அடமானம் வைத்து15 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக கொடுத்தார், மணிஷ் மீனா.
விதி யாரை விட்டது? "நண்டு கொழுத்தால் 'வளை'யில் தங்காது" என்று கிராமங்களில் ஒரு 'சொலவடை' சொல்வார்கள். அதேபோல் நல்ல சம்பளத்தில் தனக்கு வேலை வாங்கி கொடுத்த கணவரை பார்த்து, "உங்களுக்கு கென்று நிரந்தரமாக எந்த ஒரு வேலையும் இல்லை; "இதனால், நான் உங்களை விட்டு பிரிகிறேன்" என்று சொல்லி, கணவரை விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் பெரிய அளவில் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்த மணிஷா, தன் மனைவிக்கு 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி வேலை வாங்கி கொடுத்த விவரங்கள் அனைத்தையும் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் புகாராக எழுதிக் கொடுத்து விட்டார்.

அதைத்தொடர்ந்து மேற்கு மத்திய ரயில்வேயின் ஊழல் கண்காணிப்பு துறை விசாரணையை தொடங்கியது. பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் நடத்திய புலன் விசாரணையில் ரயில்வே வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ததில் இது போன்ற பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புகாரைத் தொடர்ந்து மணீஷாவின் மனைவி ஆஷா மீனா மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட ரயில்வே காவலர் ராஜேந்திரா ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டனர். ஆஷா மீனா மட்டுமல்ல இதே போல் நிறைய பேருக்கு முறைகேடாக வேலை வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மணீஷ் மீனா, எனது மனைவியும் இடைத்தரகரும் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ஜபல்பூரில் உள்ள மூத்த ரயில்வே அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் என்ற தனது ஆதங்கத்தையும் கொட்டி இருந்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் தொடரும் அதிருப்தி... செங்கோட்டையனை அடுத்து எடப்பாடியாருக்கு ஷாக் கொடுத்த எக்ஸ்-எம்.எல்.ஏ..!