வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உட்பட சிலருக்கு திருவான்மியூரில் 3457 சதுர அடி மற்றும் 4763 சதுர அடி வீட்டுமனைகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்தது.

இந்த ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அப்போதைய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை, கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது வழக்குப் பதிவு செய்தது.
இதையும் படிங்க: சி.வி.சண்முகத்திற்கு நாவடக்கம் தேவை.. சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!
அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த வழக்கில் அமைச்சர் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அமைச்சர் என்பதால் வழக்கு தொடர ஆளுநர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனும் போது, சபாநாயகர் அனுமதி அளித்தது தவறு என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணை வந்தபோது அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு எதிரான வழக்கு.. ரத்து செய்ய முடியாது.. நீதிமன்றம் திட்டவட்டம்..!