இந்தியா-அமெரிக்கா இடையே எந்தவிதமான வர்த்தக ஒப்பந்தமும் முடிவாகவில்லை, உறுதி செய்யப்படவில்லை, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று வர்த்தகத்துறை செயலர் விளக்கமளித்துள்ளார். இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா குறைந்த வரி விதிக்கிறது. ஆனால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரியை இந்தியா விதிக்கிறது, இது நியாயமற்றவர்த்தக முறை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரி முறையை அறிமுகம் செய்வதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி அதிகமான வரிவிதிக்கும் நாடுகளுக்கு அமெரிக்காவும் அதிக வரிவிதிக்கும், குறைவாக வரிவிதிக்கும் நாடுகளுக்கு குறைவான வரிவிதிப்போம் என்ற முறையைக் கையாள இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் அமெரிக்கப் பொருட்களுக்கு இறக்குமதி வரியைக் குறைக்கவும் இந்தியா சம்மதித்துவிட்டது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்தது. விவசாயிகள் நலன், இந்திய தொழில்கள் நலனில் மத்திய அரசு சமரசம் செய்கிறதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தன.
இதையும் படிங்க: தேர்வு நாளில் தந்தையை பறி கொடுத்த மாணவி.. மனதை கரைக்கும் காட்சிகள்..
இந்நிலைியல் மத்திய வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் மத்திய வர்த்தகத்துறை செயலர் சுனில் பரத்வால் நேரில் விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில் “அமெரிக்கப் பொருட்கள் இறக்குமதிக்கு வரியைக் குறைப்பதாக இந்தியா அமெரிக்காவிடம் எந்தஉறுதியும் அளிக்கவில்லை. இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தொடர்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, எந்த இறுதியான முடிவும் இன்னும் எட்டப்படவில்லை.

அமெரிக்க அதிபர் பேச்சுக்கு பின்னால் யாரும் போக முடியாது, இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சு நடந்து வருகிறது. வர்த்தக ஒப்பந்தத்தில் நிச்சயம் இந்தியாவின் நலன் காக்கப்படும், முன்னுரிமை அளிக்கப்படும். தடையில்லா வர்த்தகம், வர்த்தகத்தில் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவாகஇருக்கிறது. அப்போதுதான் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத் தொடர்பு மேம்படும்.
வர்த்தக விஸ்தரிப்புக்கு இந்தியா ஆதரவளிக்கிறது, வரிப்போர் என்பது யாருடைய நலனுக்கும் உகந்தது அல்ல, மந்தநிலையைத்தான் வரிப்போர் தூண்டிவிடும். இந்தியா தனது உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு முக்கியமான துறைகளில், குறிப்பாகக் கட்டணங்களை கண்மூடித்தனமாகக் குறைக்காது. தேசிய நலன்கள் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, பலதரப்பு பேச்சுவார்த்தைகளை விட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை இந்தியா விரும்புகிறது. மெக்சிகோ, கனடா நாடுகள் அமெரிக்காவுக்கு போட்டியாக வரிப்போரில் இறங்கியுள்ளன என்றால் அவர்கள் சூழல் வேறு, எல்லையில் அமைந்துள்ள நாடுகள் என்பதாலும், அகதிகள் பிரச்சினை இருப்பதாலும் அவ்வாறு செயல்படுகின்றன.” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போலி ஆதார் மூலம் திருப்பூர் வந்தடைந்த 5 சிறுமிகள் பத்திரமாக மீட்பு..