நாம் தமிழர் கட்சியில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி உள்ளார் அக்கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ச.ராயப்பன்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 15 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் களப்பணிகளிலும், கட்சிப் பொறுப்புகளிலும் பணியாற்றி உள்ளேன். கட்சியின் சார்பாக நடைபெற்ற ஐபிஎல்-க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கும் சென்று இருக்கிறேன். கட்சியின் மீதும், தமிழ் தேசியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் எனது வாழ்வாதரமாக மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டு இருந்த நான், என்னுடைய வேலையும் விட்டுவிட்டு முழுநேர தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபட்டு வந்தேன்.

அதுமட்டுமின்றி, அலுவகங்களில் பிற இயக்கத்தினர் தாக்குதல் நடத்தும்போதும், முன்நின்று எதிரிகளை எதிர்கொண்டு இருக்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியை, இதுவரை சிறப்புற கட்டமைத்து வந்திருக்கிறேன். அப்படி இருக்கையில், கடந்த சில ஆண்டுகளாக நமது கட்சியில் சமூக நீதியற்ற நிலைப்பாட்டைக் காண்கிறேன். இதனால் மிகுந்த மனவருத்தத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறேன்.
இதையும் படிங்க: பெரிய கட்சிகள் கூப்பிட்டே போகாதவன்.. விஜய்யிடம் கூட்டணி வைப்பேனா.? தவெக கூட்டணிக்கு நோ சொன்ன சீமான்

நீ சாதியைப் பார்த்து போடுகிற ஓட்டு, எனக்குத் தீட்டு.. நீ தாழ்த்தப்பட்டவன் என்றால், உன்னைத் தாழ்த்தியவன் யார்? என்ற உங்கள் மேடைப் பேச்சையெல்லாம் கேட்டு கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு, இந்த கட்சியில் களப்பணியாற்றி வந்தேன். ஆனால், அந்த பேச்சுக்கள் தற்போது வெறும் மேடைப்பேச்சாக மட்டுமே மாறியிருக்கிறது.
நமது கட்சியின் கட்டமைப்பில் பலமான சாதியப் பாகுபாடு உள்ளது. இதுவரை கட்சிக்கு வேலைசெய்து, கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தவர்களை சாதியின் அடிப்படையில் விலக்கி, கட்சிக்காக எந்த பணியும் செய்யாத தன் சமூகமே பெரிதென்று இருக்கிறவர்களை பொறுப்பில் அமர்த்துகிற நிலைப்பாடு, நமது கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. இதனைக் கண்டு தினம் துடித்துத் தவிக்கிறேன்.

இதுபோன்ற நடவடிக்கைகள், நமது கட்சிக்கும் கட்சியின் கொள்கைகளுக்கும் எதிராக உள்ளதால் எப்படி உடலை விட்டு உயிர் பிரியுமோ? அதே வலியுடன் கட்சியை விட்டுப் பிரிகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ச.ராயப்பன் கூறியுள்ளார். சாதிக்கு எதிராக தமிழ்த் தேசியம் என்ற கொள்கையின் கீழ் களமாடி வரும் சீமான், இந்த குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இதையும் படிங்க: 'இந்தியை ஒழிப்பதும் கட்டாயமன்றோ..?- ஸ்டாலினின் எதிர்ப்பு: இது தேர்தலுக்காக திமுகவின் நாடகம்- தோலுரிக்கும் சீமான்..!