அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரிப் போர் அச்சுறுத்தலைச் சமாளிக்கவும், பதிலடி கொடுக்கவும் இந்தியாவிடம் தனியாக கொள்கை இருப்பது அவசியம் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் என்டிடிவிக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரிப் போர் குறித்து அச்சுறுத்தலை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தி வருகிறார். இதை சமாளிக்கவும், பதிலடி கொடுக்கவும் இந்தியாவிடம் தனியாகக் கொள்கைகள் இருப்பது அவசியம். அமெரிக்கா ஒரு படி முன்னேறி இரண்டு படிகள் பின்னோக்கி செல்கிறது என்பது இந்திய அரசின் கருத்து. ஆனால், அதை எதிர்கொள்ள ஒரு கொள்கையை அரசு கொண்டிருக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஈரான் வெளியிட்ட ஏவுகணை நகரம்.. அமெரிக்காவை எச்சரித்து வீடியோ வெளியீடு..!
உண்மையில், எனக்குக் கிடைத்த தகவல் என்னவென்றால், பெரும்பாலான அமைச்சர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்புணர்வு இல்லாமல் நம்பிக்கையற்று உள்ளனர். அமெரிக்காவின் நிச்சயமற்ற கொள்கைக்கு எதிராக எதிர்வினையாற்றும் கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசில் யார் ஈடுபட்டுள்ளனர்? எனக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாது.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பொது விவாதம் நடத்த விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் முக்கிய எதிர்க்கட்சிகளையாவது அழைத்து, என்ன மாற்று சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை தலைவர்களிடம் நம்பிக்கையுடன் மத்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும்.
ட்ரம்பிற்கு எதிராகப் போராடும் எண்ணம் கொண்ட, நலன்களை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் உள்ள பிற நாடுகளுடன் பொதுவான நிலையைக் கண்டறிய வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான வரிகளை விதிக்க அதிபர் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கத் தொடங்கினால், பாதிக்கப்பட்ட நாடுகள் தாங்களாகவே தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கும்” இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கு 25 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனால் இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 700 கோடி டாலர் அளவுக்கு ஆட்டமொபைல் பாகங்கள் ஏற்றுமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து கார் ஏற்றுமதி அமெரிக்காவுக்கு நடக்கவில்லை என்றாலும் டாடா சார்பில் தயாரிக்கப்படும் ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் அமெரிக்கச் சந்தையில் முக்கிய இடத்தை வகித்துள்ளது. இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் சிக்கலைச் சந்திக்கக்கூடும்.

ப.சிதம்பரம் மாநிலங்களவையில் நேற்றுப் பேசுகையில் “ வரி என்பது அறையில் யானை இருப்பது போன்றது. பரஸ்பர வரி விதிக்கப்போவதாக அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த சுங்கவரிக் குறைப்பு என்பது உண்மையான கொள்கையா அல்லது அதிபர் ட்ரம்பின் மிரட்டலுக்கு பயந்து அறிவிக்கப்பட்டதா. மோட்டார் வாகனங்கள், பொம்மைகளுக்கான வரிக்குறைப்பு என்பது அதிபர் ட்ரம்ப் எபெக்ட்தான்.
இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை, பணவீக்கம், குறிப்பாக உணவு, கல்வி, சுகாதாரம், கூலி ஆகியவற்றில் அதிகரிக்கும் பணவீக்கம், குடும்பங்களில் கடன் அதிகரிப்பு ஆகியவை பெரிய சிக்கலாக இருக்கின்றன. ஆனால் பட்ஜெட்டில் எந்தவிதமான முன்யோசனையும் இன்றி, சுகாதாரம், கல்வி, சமூக நலம், வேளாண்மை, கிராம மேம்பாடு ஆகியவற்றுக்கான நிதியைமத்திய அரசு குறைத்துள்ளது சரியான முடிவல்ல
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்டைய கிளப்பும் கோலி சோடா..! அமெரிக்க, வளைகுடா சந்தையில் இந்திய சோடாவுக்கு கடும் கிராக்கி..!