பாலமேடு ஜல்லிக்கட்டில் குளறுபடி நடப்பதாக மாடுபிடி வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, மதுரையில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் குளறுபடி நடப்பதாக மாடுபிடி வீரர்கள் குற்றச்சாட்டி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு:
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டில் மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. 1000 காளைகளுடன் மல்லுக்கட்ட 900 காளையர்கள் களமிறங்குகின்றனர். சிறந்த காளைக்கு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆரம்பமே இப்படியா? - பாலமேடு ஜல்லிக்கட்டில் போலீசார் - மாடுபிடி வீரர்கள் இடையே தள்ளுமுள்ளு!
வர்ணனையாளர் மீது புகார்:
வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து வரும் காளைகளை காளையர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். “முடிஞ்சா தொட்டுப் பார்” என காளைகளும், “யாருகிட்ட” என காளையர்களும் போட்டி, போட்டி வருகின்றனர். தற்போது முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், அதிக அளவிலான உள்ளூர் காளைகள் வாடிவாசலில் இருந்து திறந்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது. விழா ஏற்பாட்டாளர்களும், வர்ணனையாளரும் மாடுபிடி வீரர்களை உள்ளூர் காளைகளை பிடிக்க வேண்டாம் என எச்சரிப்பதாகவும், இஷ்டத்திற்கு முடிவுகளை மாற்றி, மாற்றி கூறுவதாகவும் மாடுபிடி வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினாலும் “மாடு பிடிபடவில்லை” என வர்ணனையாளர் அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாடுபிடி வீரர்களின் உழைப்பை பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டி மதிக்கவில்லை என்றும், உள்ளூர் நபர்கள் அல்லது கமிட்டிக்கு வேண்டப்பட்டவர்களின் காளைகள் வந்தால் அதனை வீரர்கள் அடக்கினாலும், காளை வெற்றி பெற்றதாகவே அறிவிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகின்றனர்.
மாட்டின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு:

மற்றொருபுறம், வெளியூரில் இருந்து மாடுகளை கொண்டு வந்த உரிமையாளர்களை விழா ஏற்பாட்டாளர்கள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்ளூர் காளைகள் தோல்வியடைந்தாலும் வெற்றி பெற்றதாகக்கூறி பரிசுகளை வாரி வழங்கும் கமிட்டியினர், உண்மையாகவே வெற்றி பெறும் வெளியூர் மாடுகளுக்கு பரிசுகளை வழங்காமல் புறக்கணித்து வருவதாகவும், மாட்டுக்கான பரிசைக் கேட்டு உரிமையாளர்களை நீண்ட நேரம் கெஞ்ச விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் பாலமேடு ஜல்லிக்கட்டில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
புடிங்க அவன; புடிச்சி கேஸ் போடுங்க:

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் பரபரப்பான முதல் சுற்றின் போது, ஆண்டனி என்ற மாட்டின் உரிமையாளர் வாடிவாசலில் இருந்து தனது காளை அவிழ்த்துவிடப்படும் போது, வீரர்கள் மீது திருநீறு தூவினார். இதனை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கவனித்த மதுரை ஆட்சியர் சங்கீதா மைக்கில், “யாரு அது திருநீறு தூவுவது... அவரைப்பிடிக்க.. பிடிச்சி கேஸ் போடுங்க” என காவல்துறைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இதுபோல் மாடுபிடி வீரர்கள் மீது யாராவது விபூதி அல்லது பவுடர் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: ஆரம்பமே இப்படியா? - பாலமேடு ஜல்லிக்கட்டில் போலீசார் - மாடுபிடி வீரர்கள் இடையே தள்ளுமுள்ளு!