திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடைபெற்றிருப்பதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் 4.54 கொலைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அந்த ஆண்டில் 1686, 2022-ஆம் ஆண்டில் 1690, 2023-ஆம் ஆண்டில் 1681, 2024-ஆம் ஆண்டில் 1540 என கடந்த 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. முதலமைச்சரின் கூற்றுக்கு மாறாக முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
இதையும் படிங்க: நேற்று அப்செட்... இன்று ஆப்சென்ட்... திமுக கூட்டணிக்கு ‘டாடா’ காட்டப்போகிறாரா வேல்முருகன்?
முந்தைய அதிமுக ஆட்சியில் 2016-ஆம் ஆண்டில் 1603, 2017-ஆம் ஆண்டில் 1560, 2018-ஆம் ஆண்டில் 1569, 2019-ஆம் ஆண்டில் 1745 என 6477 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்ததை விட திமுக ஆட்சியில் 120 படுகொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. சராசரி அடிப்படையில் பார்த்தால், அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 30 படுகொலைகள் அதிகமாக நடந்திருக்கின்றன.

திமுக ஆட்சியில் உண்மையிலேயே சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றால், கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது என்பதற்கு திமுக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தான் சான்று ஆகும்.
கொலை வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதாக திமுக அரசு கூறுகிறது. அதிலும் உண்மை இல்லை. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை படுகொலை செய்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை; திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன் பாளையம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமான் முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.

கொலைகளைத் தடுப்பதிலும், துப்புதுலக்குவதிலும் தமிழக காவல்துறை மிக மோசமாகத் தான் செயல்பட்டு வருகிறது. குற்றங்களைத் தடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கொலைகளையும், கொள்ளைகளையும் தடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கு காரணம் திமுக அரசின் செயல்திறனற்ற தன்மை தான். தமிழக் அரசும், காவல்துறையும் இனியாவது விழித்துக் கொண்டு குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழக அரசு கூறிய பொய்.. அம்பலப்பட்டு விட்டதாக அன்புமணி விமர்சனம்.!