சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பல்வேறு தரப்பினர் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தி.மு.க.,வில் பொன்முடி வகித்து வந்த துணை பொதுச்செயலர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், பொன்முடி ஆபாச பேச்சு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொன்முடி மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை.. வழக்குப்பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பை சதிக்க நேரிடும் என்று காவல்துறையை எச்சரித்தனர். மேலும் பொன்முடி தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து இதனை விசாரிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சொத்து குவிப்பு வழக்கில் மீண்டும் சிக்கிய துரைமுருகன்.. ஆப்பு வைத்த ஐகோர்ட்..!

இந்த நிலையில் வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், வழக்குக்கு தொடர்பில்லாத முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

பிறகு, வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பகுதிகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ஜூன் 5 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: அரசியலே வேணாம்.. கொஞ்சம் பொறுங்க பா..! மழுப்பிய ஜாபர் சாதிக்..!