தூத்துக்குடி கத்தோலிக்க திருச்சபை மறை மாவட்ட திருச்சபையின் கீழ் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை செயல்படுகிறது. இந்த சபை சார்பில் கிறிஸ்தவர்கள் துக்க நாளாக அனுசரிக்கும் வருகிற புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆனால் மது கடைகளை மூட தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து தூத்துக்குடியில் இன்று அமலோற்ப மாதா மதுவிலக்கு சபை சார்பில் தூத்துக்குடி இருதய ஆலய வளாகத்தில் தமிழக அரசு புனித வெள்ளி அன்று தமிழக முழுவதும் மது கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப தமிழகம் முழுவதும் மது கடைகளை படிப்படியாக அடைக்க வேண்டும். பள்ளி கல்லூரிகள், அனைத்து சமய வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: இழுபறியில் அதிமுக... ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு வண்டியை விட்ட அமித் ஷா... பேசியது என்ன?

தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, முன்னாள் மறை மாவட்ட ஆயர் அம்புரோஸ், பங்குத்தந்தைகள், அருட் சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசு மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். கிறிஸ்தவர்கள் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி அடுத்த வாரம் வரவிருக்கிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரிக்கும் மெத்தப்பொட்டமைன் புழக்கம்.. அதிரடி நடவடிக்கைகளால் மாஸ் காட்டும் தமிழக போலீஸ்..!