
தவெக ஆரம்பித்து அதன் பணிகள் குறித்தும், யார் எதிரி யார் நண்பன் என்பது குறித்தும் பேசிய நடிகர் விஜய் பரபரப்பாக இயங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அவரது கட்சியின் தொண்டர்களும் உற்சாகமானார்கள். ஆனால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கட்சிக்குள் எவ்வித நடவடிக்கைகளும் இல்லை, முக்கிய பிரச்சனைகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்து தலைவர்கள் யாரும் பேசுவதில்லை என்பதால் விமர்சனம் எழுந்தது.
பனையூர் அரசியல், வர்க் ஃபிரம் ஹோம் அரசியல் என்றெல்லாம் கிண்டலடிக்கப்பட்டது. விஜய் பத்திரிக்கையாளர்களை சந்திக்காவிட்டாலும் பொதுச் செயலாளர் புஸ்ஸி அனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோராவது சந்திக்கலாம் என்று அனைவரும் கேள்வி எழுப்பினர். எந்த ஒரு விவகாரத்திலும் போராட்டம் ஆர்ப்பாட்டம், நீதிமன்றத்தில் வழக்கு என எவ்வித செயல்பாடும் இன்றி மயான அமைதியில் ஒரு கட்சி எப்படி இருக்க முடியும் என தொண்டர்கள், மாற்றுக்கட்சியினர், அரசியல் விமர்சகர்கள் கேள்வியாக இருந்தது.
இதையும் படிங்க: தவெகவுக்கு குழி பறிக்கிறாரா புஸ்ஸி ஆனந்த்? வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி ஆடியோ உண்மையா? என்ன நடக்கிறது தவெகவுக்குள்?
இந்நிலையில் கட்சிக்குள் ஜான் ஆரோக்கிய சாமி, புஸ்ஸி ஆனந்த் ஒரு கோஷ்டியாகவும், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் இன்னொரு கோஷ்டியாகவும் செயல்படுவதாக விமர்சனம் எழுந்தது. வெளியிலிருந்து யாரும் தவெகவில் இணைவதை புஸ்ஸி ஆனந்த் விரும்பவில்லை, கட்சித்தலைவரை மற்றவர்கள் சந்திப்பதற்கும் விடுவதில்லை, எந்த முடிவையும் விஜய் சுயமாக எடுக்கவிடாமல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு தவெகவின் ஆலோசகர்களாக இணையும் முடிவில் இருந்த மூத்த அரசியல்வாதிகள், கட்சியின் நிர்வாகிகள் இடையே பேசுபொருளாக இருந்தது.

மாவட்ட, மாநில நிர்வாகிகள் நியமனத்தில் புஸ்ஸி ஆனந்துக்கு கள நிலவரம் தெரியவில்லை, இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறார் என்கிற விமர்சனமும் முணுமுணுப்பும் கட்சிக்குள் இருந்த நிலையில் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியே புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக திரும்பியதாக ஒரு ஆடியோ வெளியானது கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொண்டர்களிடையே நாம் நினைத்ததை ஜான் ஆரோக்கிய சாமி பேசியுள்ளார், இப்படியே போனால் கட்சி தேறாது என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு வைரலானது.
இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் செயல்பாட்டால் ஒதுங்கி இருந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கவனத்து இந்த ஆடியோ சென்றுள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரித்து உண்மையை தெரிந்துக்கொண்ட எஸ்.ஏ.சி விஜய்யை அழைத்து கடிந்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ”நான் ஏற்கனவே எச்சரித்தேன் நீ என்னை ஒதுக்கினாய், இப்பொழுது நான் சொன்னது உண்மையாகி வருகிறது. நீ நியமித்த ஆளே உண்மையை போட்டு உடைத்துவிட்டார். ரசிகர்மன்ற பொதுச் செயலாளரி அங்கேயே நிறுத்தணும், கட்சி அரசியல் என்பது வேறு, இப்போதாவது நீ உரிய முடிவு எடுக்காவிட்டால் கட்சி அதள பாதாளத்துக்கு போய்விடும்” என அவர் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விரைவில் தாய், தந்தை இருவரும் விஜய்யை வந்து சந்திக்க உள்ளதாகவும் அப்போது கூடுதலாக பல விஷயங்கள் அலசப்படும் என்றும் இதற்கு ஒரு முடிவு கட்ட எஸ்.ஏ.சி களத்தில் இறங்கலாம் என்று கட்சிக்குள் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படிங்க: “யாரா இருந்தாலும் இதுதான் ரூல்ஸ்” - ஆளுநர் விவகாரத்தில் திமுக பக்கம் திரும்பிய விஜய்!