ஒரு காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருப்பது, பொருட்களை தொடக்கூடாது என்பது, பூஜை அறைக்குள் நுழையக்கூடாது, சாப்பிடுவதற்கு தனி தட்டு என பல விதங்களில் பெண்கள் ஒடுக்கப்பட்டனர். அதன் பிறகு பல தலைமுறைகள் மாறி, மாதவிடாய் என்பது இயல்பான ஒன்றுதான் என்ற நிலைக்கு இன்றைய தலைமுறையினர் கல்வியின் வாயிலாக படிப்பினை பெற்றுள்ளனர்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் எல்லா துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இதற்கு கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதமாக திகழ்கிறது. தீண்டாமை ஒழிய கல்வி உதவிய காலத்தில், கல்வி கற்கும் இடத்திலேயே மாதவிடாய் என்பதை காரணம் காட்டி மாணவி ஒருவர் ஒதுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஊட்டியின் வரப்பிரசாதம்..! உதகை அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை மாதவிடாய் என்பதை காரணம் காட்டி வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத சொல்லுவதாக தனியார் பள்ளி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் சென்று கேட்டபோது பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து மாணவியின் தாய், செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது. மேலும், வகுப்பறையில் தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறிவிட்டு, வகுப்பறைக்கு வெளியில் அமர வைக்கப்பட்டதாக தலைமை ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே மாதவிடாய் காரணம் காட்டி பள்ளி மாணவியை வகுப்பறை வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாகவும் தவறு செய்யப்பட்டவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெயக்குமார்... அதிமுக பாசம் அவ்வளவு லேசுல விடுமா?