காஞ்சிரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தண்டலம், மண்ணுார் பகுதியில், பிரிங்க்ஸ் இண்டியா லிமிடெட் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, லண்டனில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கி சார்பில் சீல் வைக்கப்பட்ட இரண்டு கன்டெய்னர்களில் 39,000 கிலோ எடையில் 1,305 வெள்ளி கட்டிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன.
லண்டனில் உள்ள லண்டன் கேட்வே துறைமுகத்தில் இருந்து, சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்திற்கு கடந்த மாதம் 30ம் தேதி கப்பலில் வந்து சேர்ந்தது.
ஏபரல் 3ம் தேதி, துறைமுகத்தின் வழக்கமான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறை முடித்து, காலை 8:30 மணிக்கு இரண்டு கன்டெய்னர்களும் சென்னைக்கு புறப்பட்டன.

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த, டி.எஸ்.எஸ்., டிரான்ஸ்போர்ட் நிறுவன லாரிகளில் வெள்ளிக்கட்டிகள் ஏற்றி அதானி துறைமுகத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுாருக்கு எடுத்து செல்லப்பட்டன. காலை 11:30 மணிக்கு, ஸ்ரீபெரும்புதுார் கிடங்கிற்கு, கன்டெய்னர் லாரிகள் சென்றன. அங்குள்ள ஊழியர்கள் லாரிகளில் இருந்த கன்டெய்னர்களை ஆய்வு செய்தபோது ஒரு கன்டெய்னரின் சீல் உடைக்கப்பட்டு, புதிதாக சீல் வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
அந்த கன்டெய்னரை திறந்து பார்த்தபோது 922 கிலோ எடையிலான 30 வெள்ளிக்கட்டிகள் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இவற்றின் மதிப்பு சுமார் 8.96 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது.
இதையும் படிங்க: அதானி துறைமுகத்தில் காணாமல் போன ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளி கட்டிகள்... கதி கலங்கிப்போன அதிகாரிகள்!

இதை அடுத்து, கன்டெய்னரின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த டிராக்கிங் டிவைஸ் ஆய்வு செய்யப்பட்டது.அதில் கடந்த 2ம் தேதி இரவு கன்டெய்னர்கள் துறைமுகத்தில் இருக்கும்போது, வெள்ளிக் கட்டிகள் குறைவாக இருந்த கன்டெய்னர் முதலில் 2 நிமிடங்களும், அதன்பின் 16 நிமிடங்கள் என இரண்டு முறை திறந்து மூடப்பட்டது தெரிந்தது.
அந்த சமயத்தில் வெள்ளிக் கட்டிகள் திருடப்பட்டிருப்பதாக நிறுவன மேலாளர் தசாரி ஸ்ரீஹரி ராவ் (வயது 48) காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து அதானி துறைமுக வளாகத்தில் உள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு பணியில் இருந்த காவலாளிகள், ஊழியர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

3 தனிப்படைகள் அமைத்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் வெள்ளிக்கட்டிகளை திருடியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கடப்பாக்கம் நவீன்குமார்(வயது 25), மன்னார்குடி ஆகாஷ் (வயது 24), ராயபுரம் எபினாஸ்(வயது 46), ஒண்டி குப்பம் திருவெற்றியூர் தேசிங்கு(வயது 55) கோட்டை குப்பம் பழவேற்காடு குணசீலன்(வயது 27) சந்தோஷ் (வயது 38) மற்றும் நந்தியம்பாக்கம் வெங்கடேஷ் (வயது 39) ஆகியோரை கைது செய்து காட்டூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: போதை மாஃபியா கேங்.. மகாராஷ்டிரா, இமாச்சலில் லிங்க்.. கோவையில் சிக்கிய கும்பல்..!