வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட செம்பவராய நெல்லூர் கிராமத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், போன்ற திருத்தங்கள் செய்யப்பட்டன.

முன்னதாக வட்ட வழங்கல் துறை அதிகாரி திவ்யா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் அவர்களது கோரிக்கை மனுவினை அளித்தனர். அதனைத் தொடர்ந்து, செம்பவராய நெல்லூர் கிராமத்தில் சுமார் 650 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 400 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட, குடும்ப அட்டைகளில் (ஸ்மார்ட் ரேஷன் கார்டு - Ration Card) செம்பவராய நெல்லூர் என்ற கிராமத்திற்கு பதிலாக, இக்கிராமத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மேல்பாடி என்ற கிராம பெயர் தவறுதலாக இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: வருகின்ற சனிக்கிழமை அனைத்து நியாய விலை கடைகளும் இயங்கும்.. அரசு வெளியிட்ட அறிவிப்பு..!

இதனை மாற்றி தருவதற்கு அப்பகுதி மக்கள் குடும்ப அட்டைகளுடன் முகாமில் திரண்டதை அடுத்து அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் பெருவாரியான மக்கள் கூடி இருப்பதனால் முகாமில் இதனை மாற்றம் செய்ய முடியாது என்றும் இதனை மாற்றுவதற்கு மக்கள் இ சேவை மையம் செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை எடுத்து ஆத்திரமடைந்த மக்கள் அதிகாரிகளின் தவறுதலால் நடந்த தவறை அதிகாரிகளே சரி செய்தல் வேண்டும் என்றும் இதனால் மக்களை அலைக்கழிக்க கூடாது என்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பானது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் அரங்கேறிய கோர விபத்து.. 1 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி..!