திருப்பத்தூர் பஉச நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(52), ஆட்டோ டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ்க்கு பஸ் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வந்த தீபா(37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரை 2வது திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் தீபா, இரவு நேரத்தில் யாருடனோ செல்போனில் அடிக்கடி பேசி வருவதாக ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று நாட்றம்பள்ளி அருகே கல்நார்சம்பட்டி கிராமத்தில் நடந்த மயானக்கொள்ளை திருவிழாவுக்கு ரமேசும், தீபாவும் சென்றனர்.
பின்னர் இரவு ஊர் திரும்பிய அவர்கள், தங்களது வீட்டிற்கு செல்லாமல், பஉச நகரில் உள்ள ரமேஷின் அத்தை வரலட்சுமி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவும் தீபா யாருடனோ போனில் பேசியுள்ளார். இதையறிந்த ரமேஷ் இன்று காலை தீபாவிடம் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: என் கணவருடன் தொடர்பில் இருந்தார்...வீடு கட்ட ரூ.25 லட்சம் தராததால் பொய் புகார்- சஸ்பெண்ட் ஐபிஎஸ் அதிகாரி மனைவி பகீர்
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், வீட்டில் இருந்த கத்தியால் தீபாவை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தீபா அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் தீபாவை வெட்டிக்கொலை செய்த கத்தியுடன் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்ற ரமேஷ், தனது மனைவி தீபாவை வெட்டிக்கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார், சம்பவ இடம் சென்று தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை கருத்து... மயிலாடுதுறை ஆட்சியர் மாற்றம்...!