2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக அமைச்சரவையில் ராஜ கண்ணப்பனும் இடம் பெற்றார். அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது. இத்துறை அமைச்சரான பிறகு சில புகார்கள் ராஜ கண்ணப்பன் மீது எழுந்தது. குறிப்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட லஞ்சப் பணம் விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதே போல் அரசு அலுவலரை மிரட்டியும் சாதியைச் சொல்லி திட்டிய ஆடியோவும் வெளியாகி ராஜ கண்ணப்பனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரிடமிருந்த போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டது. அத்துறை சிவசங்கருக்கு ஒதுக்கப்பட்டது. அவரிடமிருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. இதேபோல் உயர் நீதிமன்றத் தீர்ப்பால் பதவி இழந்த பொன்முடியிடமிருந்த உயர்கல்வி துறை, ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. ஆனால், பொன்முடி மீண்டும் அமைச்சராக்கப்பட்டதும் அவருக்கு உயர்கல்வி துறை வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் ராஜகண்ணப்பனிடமிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை பறிக்கப்பட்டது. அவருக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டது. மேலும் அமைச்சர் காந்தியிடமிருந்து கதர், கிராமத் தொழில் பறிக்கப்பட்டு, ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் இலாக்காக்களாக வழங்கப்பட்டன. தற்போது அந்தத் துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, வனத் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடிக்குக் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திமுக அமைச்சரவையில் அதிக முறை இலாக்காக்களை ராஜகண்ணப்பன் இழந்திருக்கிறார்.

1991இல் ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன், கே.ஏ. கிருஷ்ணசாமி, எஸ்.டி. சோமசுந்தரம், அரங்கநாயகம், சு. முத்துசாமி என சீனியர் அமைச்சர்கள் இருந்தபோதும், அன்று புதியவராக இருந்த மு. (ராஜ) கண்ணப்பனுக்கு பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை போன்ற துறைகள் வழங்கப்பட்டன. பிறகு 25 ஆண்டுகள் கழித்து ஸ்டாலின் ஆட்சியில்தான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழக மாணவர்கள் உங்களுக்குப் பகடை காயா.? முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் திருப்பதி நாராயணன்.!
இதையும் படிங்க: பெண் எஸ்.ஐ ஆடையை கிழித்து தாக்கிய விசிக நிர்வாகி; திமுக அரசை வெளுத்து வாங்கிய எடப்பாடி!