ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்பே தங்கள் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என்று தெலங்கானா அரசு நேற்று சுற்றறிக்கை வெளியிட்டது. ஆனால் தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்துக்களின் பண்டிகையின் போது இதுபோன்ற சலுகைகளை செய்யவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

தெலங்கானா அரசு நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் “ ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்கள் நோன்பு திறப்பதையொட்டி தங்களின் பணி நேரத்திலிருந்து ஒருமணி நேரம் முன்பாகவே அலுவலகத்தைவிட்டு கிளம்பலாம்” என சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. தெலங்கானா அரசு துறைகளில் அனைத்து முஸ்லிம் ஊழியர்களுக்கும், ஆசிரியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், வாரியங்களில் பணியாற்றும் முஸ்லிம் ஊழியர்கள், கார்பரேட், பொதுத்துறையில் பணியாற்றுவோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மார்ச் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை இந்த சலுகை முஸ்லிம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தெலங்கானா அரசு தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: 3 பிரம்மாண்ட மேடைகள்..! நாளை தேர்வு செய்யப்படும் டெல்லி முதல்வர்... 20ம் தேதி பதவியேற்பு..!

இதற்கு பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ராஜா சிங் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை என்பது, சமாதானப்படுத்தும் அரசியலின் உச்சக்கட்டம். முஸ்லிம்களுக்கு சலுகை அளிக்கும் தெலங்கானா அரசு இந்துக்களை புறக்கணித்துவிட்டது. அனைவருக்கும் சமமான உரிமை தேவை, இல்லாவிட்டால் வழங்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கருத்துக்கு காங்கிரஸ் தலைவரும், சிறுபான்மை நலத்துறையின் அரசு ஆலோசகருமான முகமது அல் சபீர் செய்தி நிறுவனத்துக்கு அளி்த்த பேட்டியில் “ முஸ்லிம் ஊழியர்களுக்கு ரமலான் நோன்பு நேரத்தில் வழங்கப்பட்ட சலுகை என்பது காங்கிரஸ் ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தவில்லை, கடந்த பிஆர்எஸ் ஆட்சியிலேயே இருந்தது. பாஜக அரசுகள் பல மாநிலங்களில் இந்த சலுகையை அளிக்கின்றன. தெலங்கானாவில் மட்டும் இல்லை, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதை புதிதாக இருப்பதுபோல் காட்டுகிறார்கள்.

இந்த சிறப்பு வசதிகளை, சலுகைகளை விழாக்கால்தில் பண்டிகை காலத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் வழங்கவேண்டும். விநாயகர் சதுர்தி, போனாலு பண்டிகைக்கும் இதே சலுகை தரவேண்டும். பண்டிகை காலங்களில் குடிமக்களுக்கு சலுகை வழங்குவது அரசின் கடமை” எனத் தெரிவித்தார். மத்திய உள்துறை இணைஅமைச்சர் பந்தி சஞ்சய் குமார் காங்கிஸ் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் “ ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் சலுகை போல் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரத காலங்களில் இந்துக்களுக்கு சலுகை வழங்கப்படுமா. சபரிமலைக்கு மாலை அணிந்த காலத்தில் தங்கள் வேலையையும் பார்த்து, கடவுளுக்கு செய்யும் கடமையையும் இந்து ஊழியர்கள் செய்கிறார்கள். ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் சலுகை தருகிறீர்கள், இந்துக்களுக்கும் தரலாமே” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பர்வேஷ், ரேகா குப்தா, சதீஷ்.. யார் அடுத்த டெல்லி முதல்வர்..?? நாளை மறுநாள் முடிவு