தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தமிழகம் இன்றைக்கு மிகப் பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, வருகிற மார்ச் 5-ம் தேதி, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.நாடு முழுவதும் இருக்கிற மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். அதாவது, இனி தமிழகத்துக்கு 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்.

இன்னொரு முறையில் கணக்கிட்டுப் பார்த்தால், நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும், நமக்கு இழப்புதான் ஏற்படும். நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவமும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு குறைந்த பிரதிநிதித்துவமும் கிடைக்கும். இதனால் தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை அல்ல. நம் மாநிலத்தின் உரிமையைச் சார்ந்தது” எனத் தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் இதுதொடர்பான அறிக்கையையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். முதல்வரின் இந்தக் கருத்துக்கு, "தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் ஒரு தொகுதிகூட குறையாது" என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் எட்டு எம்.பி. தொகுதிகள் குறைப்பா..? கொந்தளிக்கும் திமுக கூட்டணி கட்சி..!

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு தெலங்கானாவில் உள்ள பாரத ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராமராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.தொகுதி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக இருந்தால், தேசத்திற்கான நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் மறுசீரமைப்பை நான் முன்மொழிகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வரமாட்டோம்.. நாங்க தனியா போராடிக்கிறோம்.. தனி வழியில் சீமான்.!