தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோட்டில் 104, திருச்சியில் 102, சென்னையில் 101 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவானது. திருத்தணியில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், நாமக்கல், கரூர், மதுரை, தஞ்சையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகியது. இந்த தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மாலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று (10-04-2025) காலை 08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.
இதையும் படிங்க: லீவு விட்ட வெயில்... மகிழ்ச்சியில் மக்கள்... வானிலை மையம் கொடுத்த குளுகுளு அப்டேட்!!

எனவே அடுத்த 7 தினங்களை பொறுத்தவரை, ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி இன்று (10-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை (11-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெயிலுக்கு நடுவே ஒரு ஜில் அப்டேட்... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?