கடுமையான வெயிலை கருத்தில் கொண்டு ஆண்டு தேர்வுகளை விரைவாக முடித்து வைக்க பள்ளிக்கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் ஏப்ரல் ஏழாம் தேதி திருவாரூரில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெற உள்ளது .
இதையும் படிங்க: 2 நாளில் மகனின் திருமணம்.. தந்தை கத்தியால் குத்திக்கொலை.. சமாதானம் செய்ய சென்றவருக்கு விபரீதம்..!

அலங்கரிக்கப்பட்ட நிலையில் 350 டன் எடை, 96 அடி உயரம் கொண்டதாக உள்ள இந்த ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக விளங்குகிறது. இந்த தேரோட்டத்திற்கான தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், தேரில் பொருத்தப்பட உள்ள பொம்மைகள், திரைகள் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் ஆகியோர் ஆழித் தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளையும், ஆழித்தேர் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆழித் தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 7ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொறுந்தாது என்றும் 7ம் தேதி வழக்கம் போல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாறாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 7ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆண்டு தேர்வு மறு தினம்(செவ்வாய் கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏப்ரல் 7ல் திருவாரூர் ஆழித்தேரோட்டம்..! லட்சக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரம்..!