இந்தியாவின் எதிர்காலம் என போற்றப்படும் இளைஞர் சமுதாயம், போதையால் பாதை மாறி செல்வது தொடர்கதை ஆகி வருகிறது. மதுவுக்கும் கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளுக்கும் அடிமையாகும் இளைஞர்கள் சிலர், தான் என்ன செய்கிறோன் என்ற உணர்வே இல்லாமல் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகவும் இந்த போதைபொருள் புழக்கம் மற்றும் போதைப்பொருள் நுகர்வு கலாச்சாரமே முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

அதேபோல, கஞ்சா போதை தலைக்கேறியதும் இளைஞர்கள் சிலர், அடிதடி, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. போலீஸ், நீதிமன்றம் போன்றவை குறித்த அச்சமோ, கவலையோ இல்லாமல் அவர்கள் குற்றங்களில் ஈடுபட போதைப்பொருள்கள் அவர்களை தூண்டி விடுகின்றன. அவ்வாறு, திருப்பூர் அருகே திருட்டை போலீசாரிடம் காட்டி கொடுத்தவரை கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர் கொலைவெறியோடு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேசனில் பெண் போலீசிடம் அத்துமீறல்.. ஆபாச படத்தை போட்டு காமித்து போதையில் சப்-இன்ஸ் அராஜகம்..!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முருகம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர், முருகேசன் (வயது 55). இவரது மகன் அரவிந்தன் (வயது 25). நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டின் அருகில் இருந்த மளிகை கடை பூட்டை உடைக்க சில வாலிபர்கள் முயற்சித்துள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த அரவிந்தன் இது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.
அது மட்டுமின்றி பூட்டை உடைத்தவர்களை வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சூழலில், வீடியோ எடுத்து தங்களை மாட்டி விட்ட அரவிந்தன் மீது கோபத்தில் இருந்த வாலிபர்கள் நேற்று மாலை, அரவிந்தன் வீட்டிற்கு வந்து சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர்.

தடுக்க வந்த அவரது தந்தையையும் வெட்டியுள்ளனர். இதில் அரவிந்தனுக்கு 9 இடங்களில் வெட்டுக்காயமும் அவரது தந்தை முருகேசனுக்கு இரண்டு இடங்களில் வெட்டு காயமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகாஷ் ஸ்ரீபன் ராஜ் உட்பட ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனிடையே சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் பட்டாக்கத்தியுடன் ஓடும் வீடியோ அருகில் உள்ள கடையின் சிசிடிவி யில் பதிவாகியுள்ளது. மேலும் இது குறித்து உறவினர்கள் கூறுகையில், இந்த வாலிபர்கள் எப்பொழுதும் கஞ்சா போதையுடனே இருப்பதாகவும், திருட்டை தடுத்த காரணத்திற்காக வெட்டியது ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட வாலிபர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக மருத்துவமனையில் இருந்து கூட்டி சென்றபோது வாகனத்தில் இருந்தபடி வெற்றிக்குரியை காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடலூரில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு.. மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கைது..!