அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் ட்ரம்ப் வந்தவுடன், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்புவேன் என்பதில் உறுதியாக இருந்தார். அமெரிக்கா-கனடா எல்லை, அமெரிக்கா-மெக்சிக்கோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் வந்த புலம்பெயர்களுக்கு எதிராக கடுமையான கொள்கைகளை அதிபர் ட்ரம்ப் எடுத்தார்.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியவர்கள், விசாக்காலம் முடிந்தபின்பும் அமெரிக்காவில் இருப்போரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ளவர்கள், புலம்பெயர்ந்தவர்களை அந்தந்த நாட்டுக்கு அனுப்புவதில் அமெரிக்க ராணுவம் உதவ வேண்டும் என அதிபர் ட்ரம்ப் அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதை ஏற்று அமெரிக்க ராணுவம் மூலம் புலம்பெயர்ந்தோர் அந்தந்தநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். முதலாவதாக டெக்சாஸ் மாகானத்தில் இருந்து ராணுவத்துக்குச் சொந்தமான சி-17 எனும் விமானம் மூலம் 200க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இந்தியர்களை அழைத்துக் கொண்டு விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் அனல் பறக்கும் பிரசாரம்: தலைவர்கள் முற்றுகையால் திணறும் தலைநகர்!

இந்தியா மட்டுமல்லாது கெளதமேலா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தவர்கள் ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால், தொலைதூரம் வரை அமெரிக்க விமானம் மூலம் புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பிவைக்கப்படுவது இந்தியாவுக்கு மட்டும்தான். அமெரிக்க அதிபராக 2வது முறையாக ட்ரம்ப் வந்தவுடன் புலம்பெயர்ந்தவர்கள் முதல்முறையாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அப்போது அதிபர் ட்ரம்பிடம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, “ சட்டப்படி எது சரியானதோ அதை செய்யலாம். சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாங்கள் திரும்பி அழைக்கிறோம்” எனத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இருவரும் ஆக்கபூர்வமாக ஆலோசனை நடத்தி, இரு தரப்புஉறவுளை ஆழமாகவும், விரிவடையச் செய்ய கூட்டுறவு நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள 1100 இந்தியர்களை 2023 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரை அனுப்பியுள்ளது என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே முதல்கட்டமாக டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து ராணுவத்தின் சி-17 ரக விமானம் மூலம் 200க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாகத் தங்கியுள்ள இந்தியர்களை அமெரிக்க அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. ப்ளூம்பெர்க் செய்திகளின் தகவலின்படி, “ அமெரிக்காவில் மட்டும் சட்டவிரோதமாக 18ஆயிரம் இந்தியர்கள் புலம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளது.
அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூட “ வரலாற்றில் முதல்முறையாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள, சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு, அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கு கொண்டுபோய் விடுவதற்கு ராணுவ விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்து அமைப்பினர் விரட்டி, விரட்டி கைது... வீடு, வீடாக புகுந்து அலோக்காக தூக்கும் காவல்துறை!