சென்னை திருவான்மியூரில் நடைபெறும் தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது.கூட்டத்தில் அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். கட்சி தொடங்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் 22 வகையான சைவ உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 22 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், தவெகவின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் படிங்க: தவெகவின் உலகமகா உருட்டு..! சைவ சோறு போட்டு பாஜகவின் 'பி' டீம் என்பதை உணர்த்தும் விஜய்..?
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தினி மேடையில் உரையாற்றினார். அப்போது, திமுக அரசை நேரடியாக குறிப்பிட்டு பேசினார். இலவச பேருந்து விடுகிறோம், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம் என்று பெருமையாக பேசுவதாகவும், தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என அவர்கள் நினைப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் எப்படி இந்த ஆயிரம் ரூபாயை வைத்து மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தினந்தோறும் பயந்து பயந்து பல கஷ்டங்களை பெண்கள் சந்தித்து வருவதாகவும், ஒரு காட்டுக்குள் வாழ்வதைப் போல, மிருகங்களை பார்த்து பயப்படுவதை போல இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் டாஸ்மாக் என்று கூறிய அவர், நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பணம் டாஸ்மாக் தான் செல்கிறது என்று கூறினார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதே பயமாக உள்ளது என்றும் அங்கு சில ஆசிரியர்களால் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாகவும், கல்லூரிகள், வேலை செய்யும் இடம் என எங்கேயும் எங்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை என்றும் குற்றம் காட்டினார்.

இவர்கள் பொறுப்பான அரசியல் செய்வார்கள் என்று நினைத்தால் பொம்மை அரசியலை செய்து வருவதாக விமர்சித்த அவர், மற்ற ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் இருப்பதாக பேசிய கனிமொழி தற்போது காணவில்லை என்று கூறினார். அவரிடம் ஒரு நேரடி கேள்வி வைப்பதாகவும், உங்க அண்ணா கிட்ட சொல்லி பிரச்சனைகளை சரி செய்ய முயற்சி பண்ணுங்க அல்லது ரிலாக்ஸா எங்க அண்ணன் கிட்ட விட்டுடுங்க, அவர் பார்த்துப்பாரு என பேசினார்.
இதையும் படிங்க: விஜய்க்கு முழு அதிகாரம்; தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் என்ன?