அதிமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திவிரமாக முயற்சித்து வருகிறார். திமுக கூட்டணியை உடைத்து, அங்குள்ள கட்சிகள் சிலவற்றை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்கிற முனைப்போடு அவர் இருக்கிறார். நிலைமை இப்படி இருக்க, அதிமுக கூட்டணியில் ஒரே கட்சியாக இருக்கும் தேமுதிகவின் பார்வை திமுகவை நோக்கி திரும்புகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது, மாநிலங்களவைக்கு புதிதாக 6 பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2025 ஜூலையில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் ஒரு எம்பி சீட் தங்களுக்கு வழங்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் அப்படி எந்த ஒரு வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று கைவிரித்தார். வேண்டுமானால் ஒப்பந்தத்தை எடுத்து பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். தேமுதிகவுக்கு எம்பி சீட் மறுத்ததால் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது பட்ஜெட்டை மனமார வரவேற்பதாக கூறியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆளும் கட்சியுடன் இணைந்து போராடுவோம் என்றும் கூறியிருந்தார். டாஸ்மாக் ஊழல் பற்றி கூறுகையில், பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது. முதலில் முறையாக விசாரியுங்கள் என்றும் பிரேமலதா கருத்து தெரிவித்தார். கடந்த காலங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்த பிரேமலதா, திடீரென திமுகவை விமர்சிக்காமல் ஆதரித்து பேசும் நிலைக்கு மாறியிருக்கிறார். இதன் காரணமாக தேமுதிக திமுக கூட்டணியில் இணைய முயற்சிக்கிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 'ஸ்டாலினை அதிமுகவில் இருந்து வந்த இன்றைய திமுகவினர் பாதுகாப்பார்கள்'- கே.எஸ்.ஆர் சூசகம்..!

2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் கூட்டணி வெல்ல வேண்டும் என்று திமுக செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் 8 ஆண்டுகளாக நீடிக்கும் நிலையில், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைக்கப்பட்டது. அந்த வரிசையில் தேமுதிகவையும் திமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. திமுக தரப்பிலும் கூட்டணியில் சில புதிய கட்சிகளை இணைக்க கட்சி மேலிடம் கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறின.
இவற்றை வைத்து பார்க்கும்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணையக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக தொடங்கியதிலிருந்து 2011, 2019, 2024 தேர்தல்களில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருக்கிறது. இதுவரை திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே அதிமுக ஆட்சி.. இபிஎஸ்ஸை விரட்டும் ஓபிஎஸ்..!!