தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கட்சித் தலைவர் விஜய், “நமது மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் இளைஞர்களாகவே இருக்கிறார்களாம். ஏன் இருந்தால் என்ன?. அண்ணா கட்சி ஆரம்பித்த போது அவர் பின்னால் நின்றதும், எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த போது அவர் பின்னால் நின்றதும் வெறும் இளைஞர்கள்தான். அந்த இளைஞர்களால்தான் 1967லிலும், 1977லிலும் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு.” என்று பேசினார்.

இதில் விஜய் சொல்வதில் உண்மை அடங்கியிருக்கிறது. அதாவது,1967இல் திமுக வெற்றி பெற்றபோது அக்கட்சியின் இளைஞர்கள் அக்கட்சியின் பின்னால் திரண்டார்கள் என்பது உண்மையே. அதற்கு முன்பாக 1965இல் இந்தித் திணிப்பு போராட்டம் தமிழகத்தில் கொளுந்துவிட்டு எரிந்தப்போது அந்தப் போராட்டத்துக்கு ஊன்றுகோலாக திமுக இருந்தாலும், அன்றைய இளைஞர்களும் முக்கிய காரணம். இளைஞர்களை ஒருங்கிணைக்க திமுக அன்று படிப்பகங்களையும் கையில் எடுத்தது. அந்த வகையில் 1967 தேர்தலில் அண்ணா தலைமையிலான திமுகவுக்கு இளைஞர்களின் ஆதரவுக் கிடைத்தது.
இதையும் படிங்க: விஜய்க்கு அடி பலமா இருக்கும்..! விசிக இல்லாமல் அரசியல் நகர்வே இல்லை: திருமா கர்வம்..!

அப்போது காமராஜரை வீழ்த்த ராஜாஜியும் அண்ணாவுக்கு துணை நின்றார். 1967இல் திமுக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸை வீழ்த்தி வெற்றி பெற்ற முதல் மாநிலக் கட்சி என்கிற பெருமையும் திமுகவுக்குக் கிடைத்தது.
ஆனால், அதற்கு முன்பே தமிழகத்தில் திமுக காங்கிரஸுக்கு எதிராக பெரிய வளர்ச்சியைக் கொண்டிருந்த கட்சியும்கூட. 1949இல் தொடங்கப்பட்ட திமுக, 1957 தேர்தலில்தான் போட்டியிட்டது. 1957இல் முதல் தேர்தலிலேயே 15 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. 1962இல் நடைபெற்ற தேர்தலில் திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்படிப் படிப்படியாக முன்னெறிதான் 1967இல் திமுக கூட்டணி 179 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதேபோல 1977இல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றபோது திமுகவில் இருந்த ஏராளமான இளைஞர்கள் எம்.ஜி.ஆர். பக்கம் வந்தனர். அதற்கு முன்பே எம்.ஜி.ஆர். 1953 முதல் 1972 வரை சுமார் 20 ஆண்டுகள் திமுகவில் இருந்தவர். தீவிர அரசியல்வாதியாக திமுகவுக்குப் பணியாற்றியவர். அதனால், திமுக என்கிற கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது ஏராளமானோர் அவர் பின்னால் அணிவகுத்தனர்.
அதைவிட 1972இல் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கிய பிறகு 1973இல் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அன்றைய ஆளுங்கட்சியான திமுகவை அதிர்ச்சியடைய வைத்தவர். 1975இல் காமராஜர் மறைந்தார். அன்று காமராஜர் ஆதரவாளர்களும், காமராஜரை வீழ்த்திய திமுகவை வீழ்த்த எம்.ஜி.ஆரை ஆதரித்தனர்.அதன் தொடர்ச்சியாகவே 1977இல் நடைபெற்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி எம்.ஜி.ஆர். அரியணையில் அமர்ந்தார். 1967, 1977 தேர்தல்களுக்கு முன்பாக இவ்ளோ வரவாற்று நிகழ்வுகள் உள்ளன.
1967, 1977 ஆண்டுகளோடு விஜய்யின் இன்றைய அரசியல் பயணத்தை ஒப்பிட்டால், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது விளங்கும்.
இதையும் படிங்க: ஆட்சியை பிடிங்க அடுத்த ஆண்டு வந்து தமிழில் முழுமையாக பேசுகிறேன்....பிரசாந்த் கிஷோர் பேச்சு