தமிழக அரசியல் களத்தில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கட்சி ஆரம்பித்து வெற்றி பெறுவதை ஆரம்பித்து வைத்தவர் எம்ஜிஆர் அதன் பின்னர் அதை வெற்றிகரமாக கொண்டு சேர்த்தவர் ஜெயலலிதா. அதுவும் கருணாநிதி எனும் ஜாம்பவானை எதிர்த்து அரசியல் செய்து வென்றார். அடுத்து விஜயகாந்த், ஆரம்பத்தில் வேகமெடுத்தாலும் பின்னர் திமுக, அதிமுக வஞ்சத்தில் வீழ்ந்தார். அடுத்து யாருக்கும் அந்த அளவுக்கு உச்சம் பெரும் அளவுக்கு அரசியல் இல்லை.
இதையும் படிங்க: முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்? உளவுத்துறை பிடியில் சிக்கியுள்ளாரா புஸ்ஸி ஆனந்த்? விஜய் குறித்த அவதூறை பரப்பும் நுனிப்புல் ஊடகங்கள்
கமல் ஆர்பாட்டமாக ஆரம்பித்து நடத்த தெரியாமல் நடத்தி அறிவாலய வாசலில் காத்துக் கிடக்கிறார். இந்நிலையில் இன்னொரு உச்ச நடிகர் எம்ஜிஆருக்கு பின் பெரிய அளவில் ரசிகர்களின் கூட்டம் குறிப்பாக பெண்கள், பட்டியலின மக்களின் ஆதரவையும் பெற்ற நடிகராக விளங்கிவரும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்து களத்திலும் இறங்கினார். ஆரம்பத்தில் என்னமோ அவருடைய கட்சி செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது என்பது உண்மைதான், கட்சி அணிகள் அமைப்பதில், கட்சி கொடி, பெயர் அறிமுகம், கட்சி மாநாடு என வேகம் காட்டினார்.

2023 வெள்ள நிவாரண நேரத்திலும் அவர் நேரடியாக நிவாரண உதவி வழங்கி தமிழக அரசையே அதிர வைத்தார். இத்தகைய வீரியமாக மக்கள் பணியிலும், கட்சி தொடங்குவதிலும் செயல்பட்ட விஜய் அதன் பின்னர் சைலன்ட் மோடுக்கு போய்விட்டார் என்கிற விமர்சனம் எழுந்தது. கட்சி மாநாட்டில் சிறப்பாக உரையாற்றிய விஜய், அதன் பின்னர் இன்னும் வேகம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், எந்தவித முன்னெடுப்பும் இல்லாமல் அறிக்கைகள் மட்டுமே விட்டு படபிடிப்புக்கு நடிக்கச் சென்று விட்டார்.
அவராவது படபிடிப்பில் இருக்கிறார் விஜய்க்கு அடுத்த நிலையில் உள்ள பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் கட்சிப் பணியை தொடர்ந்து செய்து பத்திரிக்கையாளர் சந்திப்பு, அன்றாடம் கட்சியை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவது, பத்திரிக்கையாளர்களை சந்திப்பது, மாவட்டம் முழுவதும் நிர்வாகிகள் நியமனம், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு என செயல்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களும் சைலன்ட் மோடுக்கு போனது தொண்டர்களை சோர்வடைய செய்தது.

இந்நிலையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னைச் சுற்றியே கட்சியை வைத்துக் கொண்டதும். அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னரும் கட்சியை ரசிகர் மன்றம் போல் நடத்திக் கொண்டிருந்தது கட்சியின் விரிவாக்கத்தில் எவ்வித அக்கறையும் காட்டாமல் தனக்கு வேண்டியவர்களை ஆதாயம் உள்ளவர்களை கட்சிப் பதவியில் நியமிக்க முளைத்ததும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சியின் செயல்பாடுகள் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும் வெளியில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாவதும் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட முடக்கமும், கட்சி நிர்வாகிகளிடையே சோர்வை ஏற்படுத்தியது.
இந்த நேரத்தில் கட்சியின் ஆலோசகர்களாக அழைக்கப்பட்ட பழ.கருப்பையா, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் கூறிய ஆலோசனைகளும் புஸ்ஸி ஆனந்தை மீறி விஜய் முடிவெடுப்பதில்லை, விஜய்யிடம் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் பொழுது சொல்கின்ற ஆலோசனைகளும் மறுநாளே தவிர்க்கப்படுவதும், புஸ்ஸி ஆனந்துக்கு அது தெரிவது மூவருக்கும் சோர்வையும், எரிச்சலையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே கட்சிக்குள் இணைவதற்கு பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாஜி அமைச்சர்கள், மாஜி ஐஏஎஸ், ஐபிஎஸ்கள் உள்ளிட்ட பலரும் கேட்டிருந்த நிலையில் யாருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் தரப்படாமல் இருந்ததும், கட்சியில் இணைவதற்கு விஜய்யால் அழைக்கப்பட்ட வியூக வகுப்பாளர், பெண் பிரமுகர் உள்ளிட்ட இரண்டு முக்கிய நபர்கள் பின்னர் அவர்களுக்கு எவ்வித அழைப்பும் இல்லாத நிலையில் அவர்களும் அமைதியாக இருக்கவேண்டியதானது.
இந்த விவகாரங்கள் முடிவில்லாமல் இருந்த நிலையில் திடீரென ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ வெளியான பின் பெரிதாக வெடித்து கிளம்பியது. இதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட விஜய் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்து கட்சியை நகர்த்துவதற்கான வேலைகளை முன்னெடுக்க உத்தரவிட்டார். அதே நேரம் மீண்டும் கட்சிக்குள் தங்கள் பங்களிப்பை செலுத்துவது குறித்து, கட்சிக்குள் இணைவது குறித்து மூன்று ஆலோசகர்களும், அந்த முக்கிய வியூக வகுப்பாளரும் வேறு முடிவு எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

முதலில் தவெகவினர் கட்சியை சீர்படுத்தட்டும், பிறகு நாம் இணைவோம் என்று அவர்களுக்குள் பேசியதாக கூறப்படுகிறது. கட்சிக்குள் இணைவதாக உறுதியளித்திருந்த மேற்கண்ட நால்வரும் தங்கள் நிலைபாட்டில் சற்று பின்வாங்கிய நிலையில் அந்த பெண் பிரமுகர் மட்டும் கட்சிக்குள் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருகிறாராம். நடிகர் விஜய் இன்னும் ஓராண்டே தேர்தலுக்கு காலமுள்ள நிலையில் கட்சியை வேகமாக செயல்படுத்த தனக்கான ஒரு நெருக்கமான கோர் டீமை கட்டாயம் உருவாக்குவது அவசியம்.
அதற்கு முதலில் கட்சியில் சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும் என்று விவரம் அறிந்த கட்சி நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது.
இதையும் படிங்க: மாற்றம் முன்னேற்றம்... விஜய் தேர்வு செய்த 3 இடங்கள்... தொண்டர்கள் உற்சாகம்,.. ஆட்சியாளர்களுக்கு தலைவலி