ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம், 85 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 91 பேருடன் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் இன்று அதிகாலை 5.30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும்.
ஆனால் இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருக்கும் போது, விமான சக்கர டயர்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானம் சென்னையில் தரை இறங்கி, ஓடு பாதையில் ஓடும் போது, பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தார்.

இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்து முடிக்கப்பட்டன. அதோடு கூடுதல், முழு பாதுகாப்பு ஏற்பாடாக, தீயணைப்பு வண்டிகள், மருத்துவக் குழுவினர், அதிரடி படையினர், ஓடுபாதையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இந்த பரபரப்பான நிலையில், விமானம் இன்று காலை 5.44 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பத்திரமாக தரையிறங்கி, ஓடுபாதையில் ஓடி, விமானம் நிற்க வேண்டிய இடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: என்மீது பாசம் இல்லையா? தாய் பார்க்க வரவில்லை என சோகம்.. விமான பணிப்பெண் விபரீத முடிவு..!

இதை அடுத்து என்ன நடக்குமோ? என்று பெரும் அச்சம் பீதியில் இருந்த, சென்னை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு படையினர் அனைவரும் நிம்மதி அடைந்தனர். அதன்பின்பு விமானத்தில் இருந்த 85 பயணிகளும், பாதுகாப்பாக பத்திரமாக விமானத்தில் இருந்து கீழே இறங்கி வெளியில் வந்தனர். உடனடியாக விமான பொறியாளர்கள் குழுவினர், அந்த விமானத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த விமானத்தின் சக்கரங்களில் உள்ள டயர்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து அந்த விமானத்தின் சக்கரங்கள், டயர்கள் மாற்றப்பட்டு, அதன் பின்பு அந்த விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இன்று முதல் காலை 6 மணிக்கு, புதிதாக விமான சேவையை தொடங்குகிறது. ஜெய்ப்பூரில் இருந்து வந்த இந்த விமானம்தான், காலை 6 மணிக்கு, சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல இருந்தது. ஆனால் அந்த விமானத்தில் டயர்கள் பழுதடைந்து பிரச்சனை ஏற்பட்டதால், தூத்துக்குடி செல்லும் விமானம் காலை 6 மணிக்கு பதிலாக, இன்று தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி செல்ல வேண்டிய 74 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவிப்புக்கு உள்ளானார்கள்.

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், விமான டயர்களில், ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, விமானம் அவசரமாக, முழு பாதுகாப்புடன், சென்னையில் தரை இறங்கியது. ஆனால் விமானம் எந்தவித பாதிப்பும் இன்றி வழக்கம் போல் இறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள், விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் விமானத்தில் இருந்து கீழே இறங்கினர் என்று கூறுகின்றனர். ஆனாலும் இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள டி ஜி சி ஏ எனப்படும் டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேசன், விமான பாதுகாப்புத் துறை, இந்த சம்பவம் குறித்து விரிவான முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விமானம் புறப்பட்ட ஜெய்ப்பூர் விமான நிலையத்திலும், வந்து தரை இறங்கிய சென்னை விமான நிலையத்திலும், இந்த விசாரணைகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஜெய்ப்பூரில் இருந்து 85 பயணிகள் 6 விமான ஊழியர்கள், 91 பேருடன் வந்த விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பி, நல்வாய்ப்பாக 91 பேர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பழிக்கு பழி தீர்க்க திட்டம்.. தம்பி கொலையால் அண்ணன் ஆவேசம்.. பட்டாக்கத்தி, வெடிகுண்டுகள் பறிமுதல்..!