தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களிலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடி கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த ஜனவரியில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு விசாரணையிலும் தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “அடுத்த 15 நாட்களுக்குள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்” என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் துரைமுருகனின் இந்த நடவடிக்கைக்கு திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆபாச படம் பாக்குறது அவங்க தனியுரிமை ! டைவர்ஸ் கேட்ட கணவனுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்
தேனியில் அக்கட்சியின் கருத்தரங்கத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “துரைமுருகனின் அறிவிப்பு எங்களை (சிபிஎம்) இக்கட்டான நிலைக்கு தள்ளி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு எதிரான இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை அழைத்து உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி இருக்கலாம். அதுவும் செய்யவில்லை.

இப்படிப்பட்ட எந்த அணுகுமுறையையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாகக் கொடி கம்பங்களை எல்லாம் நாங்களே அகற்றிக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இது என்ன திமுகவின் சொந்த பிரச்சனையா? மற்ற கட்சிகளிடம் கலந்து பேச வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் கட்சிக்கு 10 கொடிக் கம்பங்கள் இருக்கின்றன என்றால், திமுகவுக்கு 150 கொடிக் கம்பங்கள் இருக்கின்றன.
அரசியல் கட்சி என்றால் அக்கட்சிக்கென ஒரு கொடி, கொடிக்கம்பம் உள்ளிட்டவைகளுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நீதிபதியே கூறினாலும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நாங்கள் கொடி மரங்களை வைத்துக்கொள்கிறோம் என்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம்.. தனிநீதிபதியின் தீர்ப்புக்கு தடைவித்த உயர்நீதிமன்றம்..!