சென்னை - அம்பத்தூர், ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் பாபு. (வயது 35). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மேலும் இவர் பேட்மிண்டன் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இதன் காரணமாக தினேஷ் பாபு, அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள பேட்மிண்டன் கிளப்பில் தினந்தோறும் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் பேட்மிண்டன் பயிற்சியில் ஈடுபட்டு வருவது வழக்கம். அந்த வகையில், வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் பேட்மிண்டன் பயிற்சிக்காக தன் மோட்டார் சைக்கிளில் தினேஷ்பாபு சென்று கொண்டிருந்தார். அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்த போது, தினேஷ்பாபுவை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், தினேஷ்பாபுவை அரிவாளால் வெட்டியது.

தினேஷ் பாபு நிலைதடுமாறி கீழே சரிந்துள்ளார். இருப்பினும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய அந்த கும்பல், தப்பியோடியது. இந்தத் தாக்குதலில் தலை, முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தினேஷ்பாபு பலத்த காயமடைந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், மர்ம கும்பல் ஒன்று வெறிச்செயலில் ஈடுபட்டது, அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தினேஷ் பாபு, ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்த, அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் தினேஷ் பாபுவை மீட்டு, சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 15லிருந்து 20 ஆக உயர்வு.. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..!

அங்கு தினேஷ்பாபுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்தத தினேஷ் பாபுவின் உடலை கைப்பற்றிய அம்பத்தூர் போலீஸார், பிரேத பரிசோதனைக்காக சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தினேஷ்பாபு தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பரோட்டா சாப்பிட்டதால் சிறுவன் பலி..? 6ம் வகுப்பு மாணவனின் மரணத்தால் பரபரப்பு..!