தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிர்ப்பாக 154 வாக்குகளும் பதிவாகின.
இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியதும், திருக்குறளை வாசித்து அவை நடவடிக்கைகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். தொடர்ந்து மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர் செரியன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. இதன்பின்னர், வினாவிடை நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இதன்பிறகு, நேரமில்லா நேரத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்திருந்த சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: சபாநாயகர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம்.. பாமக புறக்கணிப்பு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!
இதன்காரணமாக தனது சபாநாயகர் இருக்கையில் இருந்து அப்பாவு கீழே இறங்கினார். பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு நடுநிலையாக இல்லை என குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் காழ்ப்புடன் சபாநாயகர் மீது அதிமுக குற்றஞ்சாட்டுவதாக விளக்கமளித்தார்.

இதன்பிறகு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானம் வெற்றிபெற 118 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் முதலில் குரல் வாக்குடுப்பு நடைபெற்றது. பின்னர் டிவிஷன் முறையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவையின் கதவுகள் அடைக்கப்பட்டன. தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தலைமையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 154 வாக்குகளும் பதிவாகின. இதன் காரணமாக சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு சபாநாயகர் அப்பாவு தனது இருக்கைக்குத் திரும்பினார். அவை நடவடிக்கைகள் வழக்கம்போல் நடைபெற்றன.
அதிமுக ஆட்சிகாலத்தில் அப்போதைய சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி சபாநாயகராக விஜேந்தர் குப்தா தேர்வு... 6 மொழிகளில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு.. முதல் நாளிலேயே அமளி..!