தமிழக வெற்றிக் கழகத்திற்கு வியூகம் அமைக்கப்போவதில்லை என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷேர் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் நுழைவதை கொண்டாடும் விதமாக ஆண்டு விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் உள்ள நட்சத்திர ரிசார்டில் தொடங்கியுள்ளது. விழாவில், விஜயுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார். மேலும், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் ஆகியோரும் மேடையில் இடம்பெற்றுள்ளனர். முதலில் பாடகி மாரியம்மாள் இசைக்குழுவினரின் கச்சேரியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

விழா மேடைக்கு வருவதற்கு முன்னதாக விழாவில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக் உடன் இடம்பெற்ற பேனரில் இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 6 விமர்சனங்களை உள்ளடக்கிய பேனரில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டார். அவர் அடுத்ததாக பேனாவை பிரசாந்த் கிஷோர் கையில் கொடுத்தார், ஆனால் அதை வாங்க அவர் மறுத்ததால் விஜயின் முகமே மாறிப்போனது.

இதையும் படிங்க: 'பாலிசி ஃபெயிலியர்… கபடதாரிகள்…'- திமுக ஆட்சியைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா..!
இருப்பினும், மேடை ஏறும் போது விஜய், பிரசாந்த் கிஷோர் இருவரும் சிரித்தபடியே தோளில் கை போட்டுக்கொண்டு ஏறினர். இந்நிகழ்ச்சியில் விஜய்க்கு நிகரான மரியாதை தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோர் உரையாற்றுவார் என்றும், 2026ம் ஆண்டுக்கான தேர்தல் வியூகங்கள் குறித்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அனைவரும் எதிர்பார்த்த படியே தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த சில நாட்களாகவே தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிரசாந்த் கிஷோர் சம்பந்தமாக நிறைய செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக் கழகத்தை வர உள்ள தேர்தலில் வெற்றி பெற வைக்கப்போகிறார் என்கிறார்கள். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது எனது கையில் இல்லை, தொண்டர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் என்ன செய்கிறார், தொண்டர்களாகிய நீங்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி அமையும்.

2021ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தேர்தல் வியூக வகுப்பாளராக ஓய்வை அறிவித்த நான், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே ஏன் வந்துள்ளேன்?. தவெகவிற்கு நான் வியூக வகுப்பாளராக செயல்படப்போவதில்லை. எனது நண்பர் விஜய்க்கு அது தேவையும் இல்லை. இதுவரை நான் பணியாற்றிய அரசியல் தலைவர்கள் போன்றவர் அல்ல விஜய், அவர் தமிழ்நாட்டிற்கான புதிய நம்பிக்கை. அதனால் தான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். தமிழக வெற்றிக் கழகம் என்பது அரசியல் கட்சி அல்ல; புதிய அரசியலைக் காண காத்திருக்கும் பல லட்சம் பேர் இணைந்துள்ள இயக்கம். இது மாற்றத்திற்கான காலம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொதப்பிய தவெக? உணவு, தண்ணீர் இல்லை... 3 மணி நேரம் பசியுடன் வாடிய தொண்டர்கள்...!