இந்திய அணியில் ஏபிளஸ் பிரிவு ஒப்பந்தத்தில் இருக்கும் நட்சத்திர வீரர்கள் நீண்டகாலமாக உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்காமல் சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தனர்.
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சீனியர்வீரர்கள் மோசமாக பேட் செய்ததையடுத்து, இழந்த ஃபார்மை மீட்க உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டது. இதையடுத்து, கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விளையாடி வருகிறார்கள்.
விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 93 ரன்கள், பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் முதல் டெஸ்டில் சதம் அடித்தபின், மீதமுள்ள 4 டெஸ்ட்களிலும் 91 ரன்கள் என கோலியின் ஃபார்ம் படுமோசமாக இருந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சவுத்தியின் வேகப்பந்துவீச்சிலும், சான்ட்டனரின் சுழற்பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்த கோலி, ஆஸ்திரேலியத் தொடரில் ஆஃப் சைடு விலகிச் செல்லும் பந்தில் விராட் கோலி தொடர்ந்து விக்கெட்டை கோட்டைவிட்டார். கடந்த 12 ஆண்டுகளாக ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விளையாடாமல் இருந்த விராட் கோலி, பிசிசிஐ உத்தரவைத் தொடர்ந்து ரஞ்சிக் கோப்பை எலைட்பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் சர்வீசஸ் அணிக்கு எதிராக டெல்லி அணியில் நேற்று களமிறங்கினார். விராட் கோலியின் பேட்டிங் நுட்பத்தில் பல கோளாறுகள் இருந்தன, ரஞ்சிக் கோப்பைக்கு முன்பாக அதைச் சரிசெய்ய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம் பயிற்சி எடுத்தார்.

உலகக் கிரிக்கெட்டில் 2014 முதல் 2019ம் ஆண்டுவரை கோலி உச்சத்தில் இருந்தபோது கோலி 80 சர்வதேச சதங்களை விளாசினார் அப்போது அவருக்கு பிரத்தியேகமாக பேட்டிங் பயிற்சி அளித்து தவறுகளைத் திருத்தியதில் சஞ்சய் பங்கருக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் சஞ்சய் பங்கர் இல்லாத நிலையில் டெஸ்ட் போட்டிகளில் கோலி 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.
விராட் கோலியை நீண்ட காலத்துக்குப்பின் உள்நாட்டுப் போட்டியி்ல் பார்க்கும் மகிழ்ச்சியில் டெல்லி கோட்லா மைதானமே ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பியது. மைதானத்தில் விராட் கோலியைப் பார்க்கும் ஆர்வத்தில் டிக்கெட் பெறுவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீஸாரின் இருசக்கர வாகனங்கள் நொறுக்கப்பட்டன, ரசிகர்கர்கள் காயமடைந்தனர். முதல்நாள் ஆட்டத்தில் விராட் கோலியின் செயல்களையும், ரசிகர்களுடன் அவர் பேசியதையும் உற்சாகப்படுத்தியது.
இதையும் படிங்க: புனேயில் இன்று 4வது டி20 போட்டி: இந்திய அணியில் இரு மாற்றத்தால் டி20 தொடரை வெல்லுமா?
முதல் நாளில் சர்வீசஸ் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2வது நாளான இன்று டெல்லி அணியில் விராட் கோலியின் பேட்டிங்கைக் காண ரசிகர்கள் குவிந்தனர்.
டெல்லி 78 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தநிலையில் விராட் கோலி களமிறங்கினார். விராட் கோலியின் பேட்டிங்கைக் காண வந்திருந்த ரசிகர்கள் அவர் களமிறங்கியபோது கரஒலி எழுப்பியும், விசில் அடித்தும் உற்சாகப்படுத்தினர். விராட் கோலி களத்துக்கு வந்தது முதல், வழக்கம்போல் வேகப்பந்துவீச்சுக்குத் திணறினார். குணால் யாதவ் வீசிய பந்துவீச்சில் ஆப்சைடு சென்ற பந்தை தொடுவதற்கு அஞ்சி தயக்கத்துடனே கோலி பேட் செய்தார்.

அடுத்ததாக வேகப்பந்துவீச்சாளர் ஹிமான்சு சங்கா பந்துவீச்சில், விராட் கோலி ஸ்ட்ரைட் ட்ரைவ் ஆட முயன்றபோது பந்து இன்கட்டராக சென்று ஆஃப் ஸ்டெம்பை தெறிக்கவிட்டு போல்டாகியது. விராட் கோலி 15 பந்துகளைச் சந்தித்து 6 ரன்னில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார்.
நியூசிலாந்து தொடர், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. உள்நாட்டுப் போட்டிகளில் பயிற்சி எடுத்தாலாவது இழந்த ஃபார்மை மீட்பார் என எதிர்பார்த்த நிலையில் அதுவும் பொய்த்துப்போனது.

விராட் கோலியின் ஆட்டத்தைக் காண 2வது நாளான இன்றும் ஆயிரக்கணக்கில்ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். கையில் விராட் கோலிக்கு ஆதரவாக பதாகைகள், போஸ்டர்கள் வைத்திருந்தனர். ஆனால், கோலி பேட்டிங்கில் சொதப்பி புஸ்ஸாகியதால், ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
இதையும் படிங்க: சொதப்பிய இந்திய பேட்டர்கள்! வெற்றியுடன் டி20 தொடரை உயிர்பித்தது இங்கிலாந்து