முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டத்திலும் வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்டிங்கை குலைத்து திக்குமுக்காட வைத்து 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருதுக்கு வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. 140 ரன்களுக்குள் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் லியாம் லிவிங்ஸ்டோனை பெரிய ஸ்கோர் சேர்க்க வாய்ப்பளிக்கும் வகையில் பந்துவீசி இந்திய பந்துவீச்சாளர்கள் வாய்ப்பை தவறவிட்டனர். டி20 தொடர் தொடங்கியதிலிருந்து வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு இங்கிலாந்து பேட்டருக்கு புரியாத புதிர்போன்று இருக்கிறது. இந்த ஆட்டத்தில் ஆர்ச்சர் போல்டாகியபோது, பந்து எப்படி தனது கட்டுப்பாட்டை மீறி போல்டாகியது எனத் தெரியாமல் புலம்பிக்கொண்டே ஆட்டமிழந்து சென்றார். புதிராகப் பந்துவீசும் வருணின் உழைப்பை இந்திய அணி இந்த ஆட்டத்தில் பயன்படுத்தவில்லை. நடுப்பகுதி ஓவர்களில் இங்கிலாந்து ரன்ரேட்டை சுருக்கி விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல அடித்தளத்தை வருண் அமைத்துக்கொடுத்தார்.
இதையும் படிங்க: ஹீரோவான திலக் வர்மா! கடைசி ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி: வெற்றியை கோட்டைவிட்ட இங்கிலாந்து

ஆனால், கடைசி நேர்த்தில் லிவிங்ஸ்டோனுக்கு பேட்டிங் பயிற்சி அளிப்பதுபோன்று அடிக்கவைத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றனர். வருணின் உழைப்பை சரியாகப் பயன்படுத்தி டெத் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். இந்திய அணிக்குள் மீண்டும் வந்ததில் இருந்து வருணின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. கடந்த 10 போட்டிகளில் மட்டும் வருண் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண், இங்கிலாந்துக்கு எதிராகவும 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
ராஜ்கோட் மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இங்கிலாந்து அணி இங்கு சேர்த்த 171 ரன்கள் என்பது இதன் சராசரி ஸ்கோரைவிட குறைவுதான்.
அப்படி இருக்கையில் இந்திய அணியின் பேட்டர்கள் குறைந்த ஸ்கோரைக்கூட சேஸ் செய்யாமல் தோற்றதற்கு பேட்டர்களின் பொறுப்பற்ற செயல்தான் காரணம். சாம்ஸன்(3), அபிஷேக் சர்மா(24), கேப்டன் சூர்யகுமார்(14), திலக் வர்மா(18), துருவ் ஜூரெல்(2), பாண்டியா(40) அக்ஸர் படேல்(15), வாஷிங்டன் சுந்தர்(6) என 8 பேட்டர்கள் வைத்திருந்தும் 171 ரன்களை சேஸ் செய்ய முடியவில்லை.
ஹர்திக் பாண்டியா(40), தவிர மற்ற எந்த பேட்டரும் 25 ரன்களைக் கடக்கவில்லை, ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்த டி20 தொடரிலேயே இந்திய அணி சார்பில் இருவர் மட்டும்தான் அரைசதம் இதுவரை அடித்துள்ளனர்.

பவர்ப்ளே முடிவதற்குள்ளே இந்திய அணி 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் வந்த பேட்டர்களும் ஓரளவு பொறுப்புடன் பேட் செய்திருக்கலாம். திலக் வர்மா கடந்த 5 இன்னிங்ஸ்களாக நாட்அவுட் முறையில் இருந்தே அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற நிலையில், அதில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தரைவிட சிறந்த பேட்டர் துருவ் ஜூரெல் அவரை 8வது வீராகக் களமிறக்கி நெருக்கடியில் தள்ளினர். இடது,வலது பேட்டர்கள் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பேட்டிங் வரிசையை குழப்பி, முறையான பேட்டரை நடுவரிசையில் களமிறக்காமல் 8-வது வரிசையில் களமிறக்கி அவரை வீணடித்தனர்.

தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தால்தான் அடுத்தடுத்து வரும் வீரர்களுக்கு சுமை, அழுத்தம் குறையும். ஆனால், கடந்த 3 போட்டிகளிலும பவர்ப்ளே ஓவர்களுக்குள் தொடக்க வீரர்களில் யாரேனும் ஒருவர் ஆட்டமிழந்துவிடும்போது, பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தும் வகையில் அடுத்துவரும் பேட்டர்கள் அதிரடி ஆட்டத்தை கையாள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விக்கெட்டை இழக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு கடந்த 3 போட்டிகளிலும் இல்லை. யாரேனும் ஒரு வீரர்தான் வெற்றியை தோளில் சுமந்து செல்ல வேண்டிய நிலைதான் இருந்தது. கடந்த இரு போட்டிகளில் அபிஷேக் சர்மா, திலக்வர்மா தோளில் சுமந்தநிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றியை சுமக்க யாரும் முன்வராத நிலையில் தோல்வி அடைந்துள்ளது.
அதுமட்டுமல்ல இங்கிலாந்து அணி 127 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது கூடஆட்டம் இந்திய அணியின் கைவசம்தான் இருந்தது. ரவிபிஸ்னாய் வீசிய 16வது ஓவர்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றி இங்கிலாந்தின் கைஓங்கச் செய்தது. பிஸ்னாய் ஓவரில் லிவிங்ஸ்டன் அடித்த 3 சிக்ஸர் ஸ்கோரை உயர்த்தியது. இதை மட்டும் கட்டுப்படுத்தியிருந்தால், இங்கிலாந்து ஸ்கோர் 150ரன்களுக்குள் இருந்திருக்கும்.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அதில் ரஷித் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். நடுப்பகுதியில் இந்திய பேட்டர்களின் ரன் ரேட்டை இறுக்கிப் பிடித்து தோல்விக்குழியில் தள்ளினார். 4 ஓவர்கள் வீசி ரஷித் 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், தனது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸரைக் கூட அடிக்க ரஷித் அனுமதிக்கவில்லை.
ராஜ்கோட் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் பெரிதாக ஒத்துழைக்காத நிலையில்கூட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மைதானத்தை நன்கு புரிந்து அதற்கு ஏற்றார்போல் பந்துவீசினர். அதுமட்டுமல்லாமல் இந்திய பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்துடன் களமிறங்கி கட்டம்கட்டி தூக்கினர்.ஆர்ச்சர், ஓவர்டன், கார்ஸ், மார்க்உட் ஆகிய 4 பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பேட்டர்களின் சொதப்பலும், பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் டெத் ஓவர்களை சரியாக இந்திய வீரர்கள் பயன்படுத்தாததும் தோல்விக்கு முக்கியக் காரணம். இதைவிட, இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்துடன் வந்து அதை களத்தில் சரியாகப் இங்கிலாந்து வீரர்கள் பயன்படுத்திய அவர்களின் வெற்றிக்கு காரணம்.
கடந்த 2 போட்டிகளிலும் செய்த தவறுகளை கேப்டன் பட்லர் செய்யவில்லை.எந்த பேட்டருக்கு யாரை பந்துவீசச் செய்யலாம், எந்த பேட்டருக்கு எவ்வாறு பீல்டிங் அமைக்கலாம் எனத் தெரிந்து அதை சரியாக அமைத்தார். சூர்யகுமார் யாதவுக்கு அதிவேகமாக பந்துவீசினால் சிக்ஸர் அல்லது விக்கெட் இழப்பார் எனத் தெரிந்து மார்க் உட்டை பந்துவீசச்செய்தார். சாம்ஸுனுக்கு விரித்த வலையில் அவரி எளிதாக வீழ்ந்தார். இதுபோல் ஒவ்வொரு வீரரையும் கட்டம்கட்டி இங்கிலாந்து அணி தூக்கியது.

இங்கிலாந்து அணியிலும் எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. டக்கெட் மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். பட்லர்(24) ரன்கள்தான். ஆனால், தொடக்க வீரர் பொறுப்பேற்று ஆடி பெரிய ஸ்கோருக்கு அடித்தளம் அமைத்துச்சென்றார். நடுவரிசையில் லிவிங்ஸ்டோன் பிஞ்ச் ஹிட்டராக ஆடியவிதம் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது.
இந்த மைதானத்தில் 171 ரன்கள் எளிதாக சேஸ் செய்யக்கூடியதுதான். ஆனால் அதை சேஸ் செய்யவிடாமல் இங்கிலாந்து அணியினர் தங்களின் திட்டமிட்ட பந்துவீச்சால் டிபெண்ட் செய்துள்ளார்கள் என்பதில்தான் வெற்றி இருக்கிறது.
இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கத்தில் டி20: இங்கிலாந்து பேட்டர்களை கலங்கடிப்பார்களா இந்திய ஸ்பின்னர்கள்