18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக 10 அணிகளும் அதன் சொந்த மைதானங்களில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முன்னாள் கேப்டன் 43 வயதான மகேந்திர சிங் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய ஆட்டத்தைக் காண ரசிகர்கள் வழக்கம் போல் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஓராண்டு கழித்து தோனி களத்துக்கு வருவதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் மும்பை மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் எம்.எஸ். தோனியின் ஃபிட்னஸ் குறித்தும் அவரிடம் பேசியது குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ”சமீபத்தில் நண்பரின் மகளுடைய திருமணத்தில் தோனியை நேரில் பார்த்தேன். வழக்கம் போல நல்ல ஃபிட்னெஸ்ஸில் இருக்கிறார். இந்த வயதில் என்னவெல்லாம் செய்கிறீர்கள், கஷ்டமாக இல்லையா? என்று அவரிடம் கேள்வி கேட்டேன். கடினம்தான். என்றாலும் இது எனக்கு பிடித்த விஷயம். இதில்தான் மகிழ்ச்சியை உணருகிறேன்” என்று தோனி பதில் சொன்னார்.

இந்த ஆர்வம் இருக்கும் வரை அவரால் ஒரு விஷயத்தை முழு ஆர்வத்துடன் செய்ய முடியும். அதைத்தான் இப்போது தோனி செய்து கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் பந்துவீச்சாளர்கள் மேல் தோனி ஆதிக்கம் செலுத்துகிறார். பயிற்சிக்கு முதல் ஆளாக வந்து விடுகிறார். கடைசி ஆளாகத்தான் மைதானத்தை விட்டு வெளியே செல்கிறார். தினமும் 2 அல்லது 3 மணி நேரம் பேட்டிங், பிறகு விக்கெட் கீப்பிங் பயிற்சியெல்லாம் செய்கிறார். விக்கெட் கீப்பிங்கிலும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார்” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல்லில் கேப்டன் பதவியா.? வேண்டவே வேண்டாம் சாமி.. தலைத் தெறிக்கும் கே.எல். ராகுல்!
இதையும் படிங்க: ஐபிஎல் டி20 தொடரில் புகையிலை, மது விளம்பரங்கள் கூடாது... மத்திய அரசு உத்தரவு..!