இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக்குழுவினர் நேற்று அறிவித்தனர். இதில் வேகப்பந்துவீச்சாளர் ஷமி கடந்த ஓர் ஆண்டுக்குப்பின் வாய்ப்பு பெற்றுள்ளார், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்ந் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
2023 நவம்பரில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்தபின் காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய ஷமி, சிகிச்சை முடிந்து ஓய்வுக்குப்பின் உடற்தகுதியை நிரூபித்து அணியில் மீண்டும் இடம் பெற்றார். இந்திய டி20 அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இருவரும் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது, ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்படவில்லை. 12ம்தேதி(இன்று) மாலைக்குள் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் அணிப் பட்டியலை ஐசிசிக்கு அனுப்ப வேண்டும் என்பதால், இன்று மாலைக்குள் அணி வீரர்களை தேர்வுக்குழிவினர் அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: நூலிலையில் தப்பிய கே.எல். ராகுல்... கடைசி நேரத்தில் கைகொடுத்த பிசிசி..!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனா சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைசி டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் முதுகு பிடிப்பு காரணமாக ஸ்கேன் பரிசோதனை சென்று வந்தார், இதனால் பும்ரா பந்துவீசவில்லை. இந்த காயத்தின் தன்மை தெரியாத நிலையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

2024 டி20 தொடர், இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த முறை இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியதால் ஜெய்ஸ்வால், சுப்மான் கில் ஆகியோரோடுசேர்ந்து ரிஷப் பந்த்துக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்ஸன், துருவ் ஜூரெல் ஆகிய இரு விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பேட்டிங் ஆல்ரவுண்டர் ரியான் பராக் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால் அவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு நவம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கடைசியாக வென்றது. இந்த தொடரில் இடம் பெற்ற ராமன் தீப் சிங், ஆவேஷ் கான், யாஷ் தயால், விஜயகுமார் வியாசக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இவர்களுக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2024 நவம்பரில் சயத் முஸ்தாக் அலி கோப்பான தொடரில் மேற்கு வங்க அணிக்காக ஆடிய முகமது ஷமி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார், விஜய் ஹசாரே கோப்பைத் தொடரிலும் ஷமி இடம் பெற்று, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த இரு தொடர்களிலும் பந்துவீசிய ஷமி முழு உடற்தகுதியுடன் பந்துவீசினார், அவரின் முழங்காலில் வலியும், வீக்கமும் வரவில்லை என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த டி20 தொடருக்கு துணைக் கேப்டனாக அக்ஸர் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த வங்கதேசம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின்போது துணைக் கேப்டன் யார் என்பதை அறிவிக்காத நிலையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து சென்னை, ராஜ்கோட், புனே, மும்பையில் நடக்கிறது. பிப்ரவரி 6ம் தேதி நாக்பூரில் முதல் ஒருநாள் போட்டியும், 9-ம் தேதி கட்டாக்கில் 2வது போட்டியும், அகமதாபாத்தில் 12ம் தேதி கடைசி போட்டியும் நடக்கிறது.
பிப்ரவரி 19ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடிவிட்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்கிறது. இலங்கை அணிக்கு எதிராக கடைசியாக ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி, அந்தத் தொடரை 27 ஆண்டுகளுக்குப்பின் இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய டி20 அணி விவரம்
சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சஞ்சு சாம்ஸன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, துருவ் ஜூரெல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல்(துணைக் கேப்டன்), ரவி பிஸ்னோஸ், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி
இதையும் படிங்க: தோல்வியில் துவளும் இந்திய அணி..! கௌதம் கம்பீர் மீது அதிருப்தி... மும்பையில் கூட்டத்தை கூட்டிய பிசிசிஐ..!