அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் முக்கியமான அரையிறுதி, இறுதிப் போட்டியில் கலக்கி இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த வீரர்களில் வருண் சக்கரவர்த்தியும் ஒருவர். இந்நிலையில் 2021இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சுற்றுப் போட்டியோடு வெளியேறிய பிறகு தனக்கு வந்த மிரட்டல்கள் குறித்து தற்போது பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “2021 டி20 உலகக் கோப்பை தொடரில் என்னால் சரிவர செயல்பட முடியவில்லை. அதனால், நான் மனதளவில் சோர்வடைந்தேன். ஆடும் அணியில் வாய்ப்பு கிடைத்தும், ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியவில்லை. அதன் பிறகு எனக்கு இந்திய அணியில் மூன்று ஆண்டுகளுக்கு விளையாடும் வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்திய அணியில் முதல் முறையாக விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்ததைவிட மீண்டும் வாய்ப்பு பெறுவது மிகவும் கடினமாக இருந்தது.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கைக்கு வந்தது எப்படி.? 2027 உலகக் கோப்பையில் விளையாடுவேனா.? மனம் திறந்த ரோஹித்!
ஆனால், தொடர்ந்து நான் நம்பிக்கையுடன் பயிற்சி செய்து கொண்டே இருந்தேன். என்றாலும் அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதம் எனக்கு இல்லாமல் இருந்தது. 2021 உலகக் கோப்பை முடிந்த பிறகு எனக்கு மிரட்டல் அழைப்புகள் வந்தன. ‘நீ இந்தியாவுக்கு வரக் கூடாது’ என்றெல்லாம் என்னை அச்சுறுத்தினர். ரசிகர்கள் அந்த அளவுக்கு மிகவும் எமோஷனலாக கனெக்ட் ஆகியுள்ளனர்.

அதையெல்லாம் கடந்துதான் தற்போது நான் இங்கு வந்துள்ளேன். என்னை பாராட்டுவதும் அவர்கள்தான். என்னை பெருமையாகப் பேசுவதையும், தாழ்த்திப் பேசுவதையும் கடந்து செல்கிறேன். நான் என் வேலையை மட்டும் செய்து வருகிறேன்” என வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இன்றைய பாகிஸ்தான் டீமால் இந்திய பி டீமைகூட வீழ்த்த முடியாது.. கவாஸ்கர் கருத்தால் கொந்தளிக்கும் இன்சமாம்.!