பார்டர் கவாஸ்கர் கோப்பையை கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி தக்கவைத்திருந்தது. ஆனால், இந்த முறை ஆஸ்திரேலிய பயணத்தில் 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி பறிகொடுத்தது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளுமே இந்திய பேட்டர்களுக்கு சவாலானதாகவே இருந்தது. இந்த 10 இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி, நிதிஷ் குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால் ஆகியோர் மட்டுமே சதம் அடித்தனர். இதில் கோலி முதல் டெஸ்டைத் தவிர மற்ற 4 போட்டிகளிலும் சேர்த்து 90 ரன்கள்தான் சேர்த்தார்.

கேப்டன் ரோஹித் சர்மா 6 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 31 ரன்கள்தான் சேர்த்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்திய பேட்டர்கள் பேட்டிங் செய்ய சவாலான ஆடுகளமாக 5 மைதானங்களிலும் பிட்ச் வடிவமைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக பிங்க் பந்தில் பகலிரவு ஆட்டத்தில் பந்துகள் ஆடமுடியாத அளவுக்கு இருந்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளங்களை அந்நாட்டு வாரியம் அமைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்திய பேட்டர்கள் எந்த அளவுக்கு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்களோ அதேபோல இந்தியாவின் பும்ரா, சிராஜ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்டர்களும் சில நேரங்களில் திணறியதைக் காண முடிந்தது.
இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்களின் தன்மை, தரத்தை ஆய்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரேட்டிங்கை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் நடந்த பெர்த், அடிலைட் ஓவல், பிரிஸ்பேன் காபா, மெல்போர்ன்ஸ் மைதானங்களின் தரம் “ மிகவும் நன்று”(வெரி குட்) என்று ஐசிசி சான்றளித்துள்ளது. கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி நடந்த சிட்னி ஆடுகளம் “திருப்திகரமாக” இருப்பதாகத் தெரிவித்துள்ளது.2023ம் ஆண்டிலிருந்து ஐசிசி பிட்ச் ரேட்டிங் முறை 6 பிரிவிலிருந்து 4 பிரிவாக குறைந்துள்ளது. அதாவது “வெரி குட்”, “திருப்திகரம்”, “திருப்திஇல்லை”, “தகுதியற்றது” எனப் பிரித்துள்ளது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்த முதல் 4 டெஸ்ட் போட்டிகளின் ஆடுகளங்கள் மிகவும் உயர்ந்த தரத்தில் வடிவமைக்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது, இதனால்தான் இரு அணிகளுக்கும் இடையே உச்சக்கட்ட அளவில் யார் வெல்வது என போராட்டம் நடந்தது.
இதையும் படிங்க: ‘சுப்மான் கில் என்ன செய்தார்?’ ‘தமிழராக இருந்தால் எப்போதோ இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்’: பத்ரிநாத் ஆவேசம்

ஆனால் சிட்னி டெஸ்டில் போட்டி 3 வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இது பலராலும் விமர்சிக்கப்பட்டநிலையில், அந்த ஆடுகளம் திருப்திகரமாக மட்டுமே இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் பீட்டர் ரோச் கூறுகையில் “ஐசிசி எங்கள் மைதானங்களின் பிட்சுகளுக்கு முதல்தர ரேட்டிங் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடருக்கு சிறந்த ஆடுகளங்களை அமைத்தமைக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். பிட்ச் வடிவமைப்பாளர்களின் கடின உழைப்புக்கு கிடைத்தபரிசாகும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த முதல் தர பிட்சுகள் காரணமாகத்தான் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகள் இன்னும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றன” எனத் தெரிவித்தார்.

தோல்விக்கு ஆடுகளங்கள் காரணமா..?
இந்தியாவின் தோல்விக்கு மோசமான ஆடுகளங்கள் காரணம்அல்ல. பேட்டர்கள் மோசமாக தயாராகி இருந்ததும், முதல்தரமான வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பந்துகளை எதிர்கொண்டு ஆடுவதற்கு இந்திய பேட்டர்கள் இன்னும் தங்களைத் தயார் செய்யவில்லை என்பதையே இந்த தோல்வி அம்பலப்படுத்தியது.
தரமான ஆடுகளங்களில் ஆடுவதற்கு இந்திய பேட்டர்களை பழக்கப்படுத்தி பயிற்சி அளித்திருந்தால் நிச்சயம் போட்டி இன்னும் ஸ்வரஸ்யமாக இருந்திருக்கும். ஆனால், இந்தியாவில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக குழிபிட்சுகளையும், பேட்டர்களுக்கு சாதகமாகவும் அமைத்து அதில் விளையாடி பழகியதால் இதுபோன்ற முதல்தரமான, உலகத் தரமுள்ள ஆடுகளங்களில் இந்திய பேட்டர்களால் விளையாட முடியவில்லை. குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மான் கில், கேஎல் ராகுல், ஜடேஜா போன்றோரின் பேட்டிங் திறன் இதுபோன்ற ஆடுகளங்களில் அம்பலப்பட்டுவிட்டது.
இதையும் படிங்க: ரோஹித், கோலியை இந்திய டெஸ்ட் அணியிலிருந்தே தூக்குங்கள்: அகர்கருக்கு ‘டோஸ்விட்ட’ பிசிசிஐ...