சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19இல் பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஜனவரி 19இல் அறிவிக்கப்பட்டது. அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுள்ளார். இந்நிலையில் 11 பேர் கொண்ட அணியில் யார் இடம் பெற வேண்டும் என்பது தொடர்பாக அண்மையில் ஓய்வு பெற்ற இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், " இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக கில் இருக்கும்போது ஜெய்ஸ்வாலை ஏன் எடுக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். கடந்த 18 மாதங்களாக இந்திய அணியில் அதிக ரன்களைக் குவித்த வீரர் ஜெய்ஸ்வால்தான். என்னை பொறுத்தவரை ரோஹித்துடன் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். கில் மூன்றாவது வீரராக களமிறங்கலாம். நான்காவது வீரராக விராட் கோலியும், ஐந்தாவது வீரராக கே.எல்.ராகுல் அல்லது ரிஷப் பந்த், ஆறாவது வீரராக ஹர்திக் பாண்ட்யா, ஏழாவது வீரராக ஜடேஜா அல்லது அக்சர் படேல், எட்டாவது வீரராக வாஷிங்டன் சுந்தர் இறங்க வேண்டும்.
இதனால் இந்திய அணியின் பேட்டிங் லைன் வலுவாக இருக்கும். மேலும் பும்ரா, ஷமி, அஸ்ரப்தீப் சிங் என 3 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் இடம் அளிக்கலாம். இது இந்திய அணி வலுவாக இருக்க உதவும்" என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி: எதிர்பார்த்த மாதிரியே இந்திய அணி அறிவிப்பு...