2025 ஐபிஎல் சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியடைந்தது. இந்த நிலையில் ஆர்.சி.பி. அணியின் தோல்விக்கு விராட் கோலி தான் காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகினர். முன்னதாக நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பில் சால்ட் மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாக ஆடினர். பில் சால்ட் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.

மூன்றாவது ஓவரில் மட்டும் அவர் 30 ரன்கள் அடித்து விளாசினார். இந்த நிலையில் நான்காவது ஓவரில் அவர் ஒரு ரன் ஓட முற்பட்டபோது அவர் ரன் அவுட் ஆனார். அக்சர் படேல் வீசிய நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்தை பில் சால்ட் கவர் திசையில் அடித்தார். அதன் பின் விராட் கோலியும், பில் சால்ட்டும் ஒரு ரன் ஓடுவதற்காக சில அடிகளை எடுத்து வைத்தனர். ஆனால், பந்தை விப்ரஜ் நிகாம் எடுத்து விக்கெட் கீப்பர் கே.எல். ராகுலை நோக்கி வீசினார். அப்போது விராட் கோலி மறுமுனையில் இருந்து சில அடி தூரம் தான் வந்திருந்தார். பில் சால்ட் பிட்ச்சின் நடுப்பகுதிக்கு அருகே இருந்தார்.
இதையும் படிங்க: பேட்டிங்கில் சொதப்பிய ஆர்.சி.பி அணி... ரன்களை குவிக்க தடுமாறிய வீரர்கள்!!

நிச்சயமாக இருவராலும் அந்த ரன்னை ஓடி முடித்திருக்க முடியாது. இருவருமே ஃபீல்டர் பந்தை எடுத்து விட்டதை பார்த்து விட்டனர். விராட் கோலி மீண்டும் தனது இடத்துக்கே ஓடினார். பில் சால்ட் திரும்பி ஓட முயன்றார். அப்போது கால் தடுமாறி அவர் கீழே விழுந்து விட்டார். அங்கிருந்து எழுந்து அவர் மீண்டும் க்ரீஸை நோக்கி ஓடுவதற்குள் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் அவரை ரன் அவுட் செய்து விட்டார். இதை அடுத்து விராட் கோலி தான் அந்த ரன்னை ஓடி இருக்க வேண்டும், பில் சால்ட்டை அவர் ரன் அவுட் செய்துவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், நிச்சயமாக அங்கு அந்த ரன்னை ஓடி இருக்க முடியாது என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பில் சால்ட் கீழே விழாமல் வேகமாக திரும்பி ஓடி இருந்தால் ஒருவேளை ரன் அவுட் வாய்ப்பிலிருந்து நூலிழையில் தப்பிக்க வாய்ப்பு இருந்திருக்கலாமே தவிர பில் சால்ட் ஓட துவங்கிய அதே நேரத்தில் தான் விராட் கோலியும் ஓட துவங்கினார். பந்து நிச்சயம் ஃபீல்டரை தாண்டி சென்று விடும் என்ற எண்ணத்தில் தான் இருவரும் ஓடினார்கள். எனவே, இந்த ரன்னை ஓடியதில் இருவருக்குமே பங்கு உள்ளது. விராட் கோலி மீது மட்டுமே தவறும் இல்லை என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிஎஸ்கே-வை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியது ஆர்.சி.பி... ரசிகர்களுக்கு ஆறுதலான தோனியின் ஆட்டம்!!