இந்திய டெஸ்ட் அணி மற்றும் ஒரு நாள் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து வருகிறார். இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 0 - 3 என்கிற கணக்கில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. மேலும் உள்நாட்டில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஒயிட் வாஷ் ஆனது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 3 என்கிற கணக்கில் இழந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் செல்லும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது.
இந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆட்டம் படு சொதப்பலாக இருந்தது. இதனால் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியிலிருந்து ரோஹித் சர்மா விலகினார். மோசமான கேப்டன்சி, பேட்டிங்கிற்காக ரோஹித் சர்மாவை முன்னாள் வீரர்கள் உள்ளிட்டவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனவே, கேப்டன் பொறுப்பிலும் அணியிலும் ரோஹித் நீடிப்பாரா என்கிற கேள்வி எழுந்தது. அவரை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு நாள் போட்டிக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இத்தொடரில் ரோஹித் நிலை என்னவாக இருக்கும் என்பதால், ரசிகர்கள் மத்தியிலும் இது கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பி.சி.சி.ஐ.இ துதொடர்பாக ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோஹிகத் சர்மா, பிசிசிஐ நிர்வாகிகள் அடங்கிய குழு ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இந்தக் கலாச்சாரம் ஒழியனும்.. இந்திய கிரிக்கெட் உருப்பட மாஜி வீரர் அட்வைஸ்!
தற்போதைய சூழலில் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றுகொடுத்த ரோஹித், ஐசிசி சாம்பியன் டிராபியையும் வென்று கொடுப்பார் என்று பிசிசிஐ நம்பிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரோஹித் சர்மாவும் சாம்பியன்ஸ் டிராபி முடியும் வரை கேப்டனாக தொடர விரும்புவதாகவும் தெரிகிறது. இதை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ, அத்தொடருக்குப் பிறகு புதிய கேப்டன் பற்றி முடிவெடுக்கலாம் என்று தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் தன்னுடைய ஃபார்மை மீட்கும் வகையில் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா விளையாடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. யார் யாருக்கு இடம்?