ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி குரூப் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. இதேபோல் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தியும் இந்தியாவிடம் தோல்வியும் அடைந்தது. அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டியில் இன்று இந்த இரு அணிகளும் மோதுகின்றன.
இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகங்களுடன் களமிறங்கக்கூடும். வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களாக எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளித்து வருகின்றனர். நியூஸிலாந்து அணிக்கு எதிராக வருண் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இடது கை, விரல் ஸ்பின்னர்களான அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் துல்லியமாக செயல்பட்டு வருகின்றனர்.
நியூஸிலாந்து அணியில் மிட்செல் சாண்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர். இதில் சாண்ட்னர், பிரேஸ்வெல் பார்மில் உள்ளனர். இவர்கள் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். இந்தத் தொடரில் இந்திய அணியில் விராட் கோலி அதிக ரன்கள் குவித்துள்ளார். எனினும் அவர், இடது கை சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறுகிறார். எப்போதும் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடும் கோலி இன்றும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. 4 ஆட்டங்களில் அவர் 104 ரன்களே சேர்த்துள்ளார். ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. ஐசிசி இறுதிப் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் செயல் திறன் இதற்கு முன்னர் சிறந்ததாக இல்லை. அவர், 3 இறுதிப் போட்டிகளில் 56 ரன்களே சேர்த்துள்ளார். இதில் அதிகபட்சம் 43 ஆகும். இதை 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எடுத்திந்தார்.
நடுவரிசையில் ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் இந்தத் தொடரில் அற்புதமாக செயல்பட்டுள்ளனர். லீக் சுற்றில் இந்த ஜோடி நியூஸிலாந்துக்கு எதிராக அற்புதமாக விளையாடி அணியை மீட்டது. நடப்பு தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் சுழலுக்கு எதிராக 126 ரன்களையும், அக்சர் படேல் 67 ரன்களையும் சேர்த்துள்ளனர். இந்த ஜோடியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அரை இறுதி ஆட்டத்தில் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பின்வரிசையில் அதிரடியாக செயல்பட்டு அசத்தினர். இவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் இந்தியா அசத்தலாம்.
இதையும் படிங்க: வருண் சக்கரவர்த்தியை நினைத்து தூக்கம் தொலைத்த நியூசிலாந்து அணி.. போட்டு உடைத்த பயிற்சியாளர்.!

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் முகமது ஷமி சிறந்த பார்மில் உள்ளார். நடப்பு தொடரில் 8 விக்கெட்கள் கைப்பற்றி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியில் 2-வது இடத்தில் உள்ள அவர், நியூஸிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். அவருக்கு உறுதுணையாக ஹர்திக் பாண்டியாக செயல்படக்கூடும். 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் முகமது ஷமி, நியூஸிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்களை சாய்த்திருந்தார். இதேபோன்ற உயர்மட்ட செயல் திறனை மீண்டும் வெளிப்படுத்துவதில் முகமது ஷமி முனைப்பு காட்டக்கூடும். இந்திய வீரர்கள் இன்று ஒருங்கிணைந்து செயல்பட்டால் 2013க்குப் பிறகு மீண்டும் இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியைத் தூக்கலாம்.
இதையும் படிங்க: ICC Championship: அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை சாய்த்தது நியூசிலாந்து... இறுதியில் இந்தியாவுடன் மல்லுக்கட்டும் கிவ்விஸ்கள்.!