சீனாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக்(DeepSeek) அமெரிக்காவின் சிலிகான் வேலியை ஆட்டம் காணவைத்துள்ளது. டீக் சீக் ஏஐ செயலி அறிமுகத்தால், சிலிகான் வேலியில் உள்ள மாபெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.9.34 லட்சம் கோடி காலியானது.
உலகின் தலைசிறந்த செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடி-யைவிட அதிக ஸ்மார்ட், துல்லியம், எளிமையாக டீக் சீக் இருப்பதால் பெரிய நிறுவனப் பங்குகள் அடிவாங்கின. அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் டீப்சீக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டதால் சாட்ஜிபிடியின் மதிப்பு சரியத்தொடங்கியது.
டீப் சீக் என்றால் என்ன?
சீனாவைச் சேர்ந்த லியாங் வெங்பெங் என்பவரால் 2023ம் ஆண்டு உருவாக்கப்பட்டது டீப்சீக். பொறியாளர் மற்றும் தொழில்முனைவோரான லியாங் வெங்பெங் செயற்கை நுண்ணறிவு பிரிவு, நிதித்துறையில் சிறப்புப் பெற்றவர். டீப் சீக் செயலியை உருவாக்கும் முன் லியாங் நிதி தொடர்பான விவரங்களை ஆய்வு செய்துவந்தார். லியாங் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சீனாவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் இருந்து சிறந்த மாணவர்களை பணிக்கு எடுத்து, ஏஐ செயலிகளை உருவாக்கியுள்ளனர். உலகில் உள்ள டெவலப்பர்கள் தங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இவர்களின் டீப் சீக் செயலி உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: ஐபோன் உற்பத்தி எல்லாமே டாடா கையில் தான்.. டாடா எலக்ட்ரானிக்ஸ் படைத்த சாதனை..!

டீப் சீக்- ஓபன்ஏஐ(OpenAI) வேறுபாடு
டீப் சீக் ஏஐ வந்தவுடன், ஓபன்ஏஐவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவு சமூக வலைத்தளத்தில் அதிகரித்துள்ளது. டீக் சீப் ஆர்1 என்பது மனிதர்களின் சிந்தனை சக்தியை பிரதிபலிக்கிறது. மற்ற செயற்கை நுண்ணறிவு மாடல்களிலிருந்து வேறுபடுத்தும் வேறுபட்டு, ஒரு குறிப்பிட்ட பதிலுக்கு பதிலளிக்கும் முன் அதன் காரணத்தையும் வழங்குகிறது. அதன் செயல்திறன் ஓபன்ஏஐ-யின் சமீபத்திய தொழில்நுட்பத்திற்கு இணையாக இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. டீப் சீக்-வி3 மற்றும் டீப் சீக்-ஆர்1 ஆகியவை அதிக திறன்வாய்ந்தவை, விலை மலிவானது, குழப்பமான , கடினமான பணிகளையும் உயர்துல்லியத்துடன் முடிவுகளை அளிக்கும் வல்லமை கொண்டது.
செலவைப் பொருத்தவரை ஓபன்ஏஐ, மெட்டா(Meta) ஆகியவற்றின் ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்கும் செலவில் ஒருபகுதியிலேயே இதை உருவாக்கிவிடலாம். என்விடியா(Nvidia) நிறுவனத்தின் உயர்ந்த ஏஐ நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் பெரிய அளவுக்கு முதலீடுகள் தேவையில்லை. ஓபன்ஏஐ, மெட்டா உள்ளிட்ட போட்டி நிறுவனங்களின் ஏஐ நுட்பத்தின் கணிதத் திறன், பொது அறிவு, கேள்விக்கு பதில் அளிப்பது ஆகிய சிறப்பாக செயல்படுகிறது. உலகின் தலைசிறந்த ஏஐ நுட்பத்தோடு டீப் சீக் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கு ஏன் கவலை
தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனாவின் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். ஜிபியு செமிகண்டக்டர்கள் போன்ற உயர்ந்த தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஆனால் தற்போது டீப் சீக் நுட்பத்தின் வருகை, வளர்ச்சி எதைக் காட்டுகிறது என்றால், சீனாவின் தொழில்நுட்பத்தை முடக்கும் அமெரிக்காவின் தந்திரங்கள் அங்கு எடுபடவில்லை என்பதைத்தான்.டீப் சீக் வெற்றிகரமாகியுள்ளதால் அமெரிக்காவின் மெட்டா, ஓபன்ஏஐ ஆகியவை கோடிக்கணக்கான டாலர்கள் செலவிட்டது கேள்விக்குறியாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்காக மைக்ரோசாஃப்ட், மெட்டா ஆகியவை 6500 கோடி டாலர்கள் செலவிட திட்டமிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அடிவாங்கிய அமெரிக்கச் சந்தை
சீனாவில் டீப் சீக் ஏஐ வெளியிட்டவுடன் அதன் எதிரொலி அமெரிக்க பங்குச்சந்தையான நாஷ்டாக்கில் கடுமையாக இருந்தது. நாஷ்டாக்கில் நேற்று வர்த்தகம் 3.1 சதவீதம் வீழ்ச்சியுடன் முடிந்தன.என்விடியா ஏஐ நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 17சதவீதம் சரிந்தன. வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையில் ஒரேநாளில் ஒரு நிறுவனப்பங்கு சரிந்தது இதுதான் வரலாறு. கடந்த ஆண்டு சேர்த்திருந்த லாபத்தை ஒரேநாளில் என்விடியா இழந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இழப்பு இதோடு முடியவில்லை, சந்தைக்கு அப்பாலும் சென்று உலகின் கோடீஸ்வரர்களையும் சொத்துக்களையும் பதம்பார்த்தது. உலகின் 500 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் 10800 கோடி டாலர்களை இழந்தனர். என்விடியா இணை நிறுவனர் ஜென்சன் ஹூவாங்கின் நிகர சொத்து மதிப்பு 20 சதவீதம் சரிந்து 2010 கோடி டாலராகக் குறைந்தது. ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசனின் சொத்து மதிப்பு 12 சதவீதம் குறைந்து, 2260 கோடி டாலராக வீழ்ச்சி அடைந்தது என ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.டெல் டெக்னாலஜிஸ் நிறுவனர் மைக்கேல் டெல் சொத்து மதிப்பில் 1300 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது, பினான்ஸ் இணை நிறுவனர் சாங்பெங் நிகர சொத்து மதிப்பு 1210 கோடி டாலராகக் குறைந்தது.
ஏன் இழப்பு ஏற்பட்டது
அமெரிக்காவின் சிலிகான் சந்தையில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து நவீன ஏஐ நுட்பத்தை நிறுவனங்களை உருவாக்கி வரும் நிலையில் மலிவான விலையில், அதிக திறன்வாய்ந்த, துல்லியமுள்ள டீப் சீப் செயலி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உலுக்கியிருக்கிறது. அமெரிக்காவின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான என்விடியா, ஆரக்கிள், டெல், மெட்டா, ஆகியவை செலவிட்ட தொகைக்கு தற்போது அழுத்தம் ஏற்பட்டு, நெருக்கடி அதிகரித்துள்ளது. அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலகில் உள்ள பலரும் டீப் சீக் ஐஏ பயன்படுத்துவது அதிகரித்தால் அமெரிக்கர்கள் உருவாக்கிய ஏஐ நுட்பத்தை சீண்டமாட்டார்கள் என்பதால் அமெரிக்க முதலீட்டாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
இதையும் படிங்க: தினமும் அன்லிமிடெட் 2GB டேட்டா.. அதுவும் 5ஜி வசதியோட.. ரூ.200க்கும் குறைவான பிளான்.!