அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அனைவரிடமும் நான் தொலைபேசியில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் என ஓ.பி.எஸ் அதிர்ச்சி தகவலைக் கூறி உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், ''புரட்சித்தலைவி அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கட்சியில் இணைய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். தமிழகத்திலே இருக்கின்ற அனைத்து மக்களும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த நாட்டிற்கு செய்த சேவைகள், ஏழை ,எளிய மக்களுக்கு தந்த நலத்திட்டங்கள் இதையெல்லாம் எண்ணி மீண்டும் கட்சி இணைந்தால் ஆட்சிக்கு வர முடியும் என்ற சூழ்நிலை உருவாகிறது என்பதை எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவினுடைய வாக்குகளை பெற தவறி விட்டார்கள். உங்களுக்கு தெரியும். ஏழு தொகுதிகளில் டெபாசிட் தொகை இழக்கப்பட்டது.

13 தொகுதிகளில் மூன்றாம் இடத்தில்தான் வர முடிந்தது. கன்னியாகுமரியில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 95 ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெற்றது காங்கிரஸ் கூட்டணி. அதிமுக என்று சொல்லிக் கொண்டிருப்பவர் வெறும் 5000 வாக்குகள் தான் பெற்றார்கள். இதிலிருந்து மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது. அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்க குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கிற நாங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று புரட்சித்தலைவர் காலத்திலிருந்து இன்று வரை இருக்கின்ற அதிமுக விசுவாசமிக்க தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். மக்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பத்திற்காக நான் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: இபிஎஸுக்கு செம்ம ஷாக் கொடுத்த ஓபிஎஸ்... ஒரே வார்த்தையை மூன்று முறை அடித்துக்கூறி அதிரடி...!

உங்களுக்கெல்லாம் தெரியும். அந்த தொகுதியில் யாரெல்லாம், எப்படி எல்லாம் என்னை தோற்கடிப்பதற்கு என்னென்ன சதி திட்டங்களை செய்தார்கள் என்பது.சூழலை எல்லாம் எப்படி உருவாக்கினார்கள் என்று தெரியும். இவைகளை எல்லாம் மீறி, 22-வது சின்னம், இரண்டாவது மிஷின். மொத்தம் பதிவான வாக்குகள் 10 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள். அதில் 3,22,000 வாக்குகளை மக்கள் எனக்கு அளித்தார்கள். பதிவான வாக்குகளில் 33 சதவிகிதம் எனக்கு வாக்களித்தார்கள். இதிலிருந்து மக்களும், தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் என்பதை நாங்கள் நிரூபித்து இருக்கிறோம்.
அவர்கள் இப்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில்கூட போட்டியிட முடியாத வகையில் இருக்கிறார்கள். எதற்கு அந்த பயம்? நாங்கள் சொல்கிறோம் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும். இதுதான் உண்மையான, தத்துவமான கருத்து. உன்னிப்பாக கவனிக்க வேண்டும். எங்களுடைய விமர்சனம் ஆலோசனையாகவும், அறிவுரையாகவும்தான் இருக்கும். அவர்களுடைய விமர்சனம் தான் கடுமையாக இருக்கும். நாங்கள் எதையும் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் எங்களுக்கு தேவை இணைய வேண்டும் என்பதுதான் எங்கள் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

ஒன்றிணை வேண்டும் என்று கூறி அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், நாங்களும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தோம். அதற்காகத்தான் என்னையும், எடப்பாடி பழனிச்சாமியையும் கூப்பிட்டு அமித்ஷா பேசினார். அது தேர்தலில் வியூகம். யாரெல்லாம் இணைந்திருந்தால் வெற்றி பெற முடியும்? சாதகமான சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதைத்தான் அமித்ஷா எடுத்துச் சொன்னார். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதனுடைய பலனை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் சொன்னதை என்னிடம் சொன்னது ரகசியம் இல்லை. வெளிப்படையாகத்தான் சொன்னார்கள். ஏற்கனவே நான் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன். ''நீங்கள் உறுதியாக ஆட்சியில் அதிகாரத்தில் உள்ள பதவியில் இருக்க வேண்டும். 'மஸ்ட்' என்று எனக்கு சொல்லி இருந்தார்கள். அதைத்தான் நான் சொன்னேனே ஒழிய, ரகசியம் என்பதெல்லாம் இல்லை. இது தான் நான் முன்பு சொன்ன ரகசியம். வேறொரு ரகசியமும் இருக்கிறது. அது பரம்பர ரகசியம். என்னை பொறுத்தவரையில் நான் இணைய வேண்டும் என்று ஒத்த கருத்தோடு இருந்து வருகிறேன்.

கட்சியில் அதிருப்தியாக உள்ள அனைவரிடமும் நான் தொலைபேசியில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். நான் செங்கோட்டையனிடம் பேசினேனா? பேசவில்லையா என்று சொல்ல முடியாது. ஒருங்கிணைப்பதற்கு உண்டான அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. சில விஷயங்களை வெளியே சொல்ல முடியாது. இணைவதற்கு சிலர் தடையாக இருக்கிறார்கள். இதுதான் அவர்களது சுயநலம். அதிமுகவிலிருந்து என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதைத் தான் ரகசியம் என்று சொன்னேன். தமிழகத்தில் இருக்கிற அரசியல் கட்சிகள் அனைவருமே நாங்க தான் முதலமைச்சராக வருவோம். நாங்க தான் ஆட்சி அமைக்க போகிறோம் என்று சொல்கிறார்கள்.
எங்களை பொறுத்தவரையில் அதிமுக மிகப்பெரிய சக்தியாக மாற வேண்டும். இருபெரும் தலைவர்கள் தங்கள் உயிரை கொடுத்து காப்பாற்றிய ஒரு இயக்கம். அந்த இயக்கம் இன்று பிளவு பட்டிருக்கிறது. யாரால் என்றால் ஒருவருக்கு தனிப்பட்ட ஈகோ. கட்சி நன்றாக இருக்க வேண்டும். மீண்டும் மாண்புமிகு அம்மா ஆட்சி மலர வேண்டும் என்று சொன்னால் இணைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். என் மீது விமர்சனமோ வசைபாடுவதோ அவர்களுக்கு பிடித்திருந்தால் நீண்ட நாள் வாழட்டும்.. வாழட்டும்… வாழட்டும்'' என வாழ்த்துகளையும் கூறினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் ஒரு கொசு.. கொசுக்களைப் பற்றி பேச வேண்டாம்.. ஜெயக்குமார் தாறுமாறு விமர்சனம்.!