'எம்புரான்' பட சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட மோகன்லால்.. வருத்தம் தெரிவித்து பதிவு.!!
'எம்புரான்' படம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகன்லால், பிரித்விராஜ், சுகுமாறன் ஆகியோர் நடித்திருக்கும் ‘எல்2: எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27இல் வெளியானது. இப்படம், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது 2002இல் நடந்த கலவரத்தை குறித்து பேசுகிறது என்று பாஜகவினர் உள்பட இந்துத்துவ ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பாளர்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இப்பபம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் படத்துக்கு எதிர்ப்பையடுத்து, 'எம்புரான்' படத்தில் 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், 'எம்புரான்' படம் சர்ச்சை தொடர்பாக நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “‘லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தில் வந்துள்ள சில அரசியல், சமூகக் கருத்துகள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதை அறிந்தேன். ஒரு கலைஞனாக, என்னுடைய எந்தப் படமும் எந்த ஓர் அரசியல் இயக்கம், சித்தாந்தம், பிரிவினர் மீது வெறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது என்னுடைய கடமை.
எனவே, எனது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட துயரத்துக்கு நானும் படக் குழுவினரும் உண்மையிலேயே வருந்துகிறோம். இப்படத்திலிருந்து இதுபோன்ற காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம். கடந்த 40 ஆண்டுகளாக எனது திரையுலக வாழ்க்கையை உங்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே எனது பலம்” என்று மோகன்லால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எல்2 எம்பூரான் படத்திற்கு மோகன்லால் வாங்கிய சம்பளம்..! மஞ்சு வாரியருக்கு இவ்வளவுதான் சம்பளமா..?
இதையும் படிங்க: கோவில் நிர்வாகத்தை குற்றம் சாட்டிய மோகன்லால்...! "மம்முட்டி பூஜை ரசிது" குறித்து பதிலடி கொடுத்த கோவில் நிர்வாகம்...!